சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துவிட்டார் ராமதாஸ்: கே.எஸ்.அழகிரி சாடல்

ந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துவிட்டார் ராமதாஸ்: கே.எஸ்.அழகிரி சாடல்


சென்னை: சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றதில் இருந்தே கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கே.எஸ்.அழகிரி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவைத் தேர்தலில், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லப்போவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி மத்தியில் ஆட்சி அமைந்தது பாஜக. தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் பாஜக இருக்கிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 24க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இதில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தி பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தார். திமுக தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தி ஓரணியில் அணி திரண்டு நிற்கின்றன. 

கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் 7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், அடுத்து  பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் 320 கோடி ஊழல் நடந்திருப்பதாக 24 ஊழல் பட்டியலை பாமக வழங்கியது. 

அடுத்த 70 நாட்களுக்குள்ளாக எந்த அதிமுக மீது ஊழல் பட்டியல் வழங்கியதோ, அந்த ஊழலுக்கு சொந்தமான கட்சியோடு கைகோர்த்து இன்றைக்கு ராமதாஸ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார். கறை படிந்த கரங்கள் இணைந்துள்ளன. இதைவிட அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா? சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். 

எனவே, திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து சந்தர்ப்பவாதிகளின் கூடாரம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்ட திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொள்கை கூட்டணி அமைத்திருக்கின்றன. 

நமது கொள்கைகளை மக்களிடம் கூறுவோம். அதிமுக, பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்துவோம். வரும் மக்களவைத் தேர்தலிலும் பாமகவுக்கு உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள். 

2004ல் மதச்சார்பற்ற கூட்டணி பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற வெற்றியின் இலக்கை நோக்கி திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடங்கி விட்டது என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com