மக்களவைத் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் இதைப் பற்றியும் பேசலாமா?

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு மக்களவைத் தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் இதைப் பற்றியும் பேசலாமா?

சென்னை: இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு மக்களவைத் தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கட்சித் தலைவர்களின் சந்திப்பு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, இதற்கிடையே உடல் நலன் விசாரிப்பு என தொலைக்காட்சி ஊடகங்களும் ஓய்வின்றி பிரேக்கிங் செய்திகளைப் போட்டு மக்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

இன்னும் ஒரு சில மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன் தமிழகத்தில் உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, மக்களவைத் தேர்தலை விட, தமிழகத்தின் அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடைத்தேர்தலைப் பற்றியும் இங்கே அலசலாம்.

இந்த 21 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல்தான், தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர்வாரா அல்லது அந்த இடத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பிடிப்பாரா என்பதை உறுதி செய்யப் போகிறது.

ஒரு சில எம்எல்ஏக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இடைத் தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளை அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், சிலர், 21 தொகுதிகளிலுமே திமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கூறுகிறார்கள். இவர்களில் யாருடைய ஆரூடம் ஜெயிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தற்போது சட்டப்பேரவையில் ஆளும் அதிமுக அரசின் பலம் அவைத் தலைவர் தனபாலை சேர்க்காமல் 114 எம்எல்ஏக்கள். தற்போதிருக்கும் பேரவையின் முழு பலம் 213. (மொத்தம் 234 தொகுதிகள், இதில் 21 தொகுதி காலி) இதில் தற்போதைய பெரும்பான்மை என்பது 107 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும் என்பதால் ஆளும் அதிமுக அரசு தற்போது பெரும்பான்மை பலத்தோடுதான் உள்ளது. ஆனால் இடைத்தேர்தலில் 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டால் பெரும்பான்மையை பெற 117 எம்எல்ஏக்கள் அதிமுக வசம் இருக்க வேண்டும். 

தற்போது அதிமுகவில் அங்கம் வகிக்கும் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைசெல்வன் (விருதாச்சலம்)  3 எம்எல்ஏக்கள் ஏற்கனவே டிடிவி தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். தேர்தலில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தமீமும் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும், பாஜகவுடன் அதிமுக இணைந்ததற்கு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, ஒட்டுமொத்தமாக இருக்கும் 114 எம்எல்ஏக்களில் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அதிமுகவுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்கள் வெறும் 109 பேர்தான். எனவே, வரும் இடைத் தேர்தலில் அதிமுக குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் பெரும்பான்மையை தக்க வைக்க முடியும். மேற்கண்ட 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் வெளியேறினாலும் கவலை இல்லாமல்.

தேர்தல் வரலாறை தூசு தட்டிப் பார்த்ததில், காலியாக இருக்கும் 21 தொகுதிகளில் 9 தொகுதிகள் அதிமுக பலம் வாய்ந்த தொகுதியாக உள்ளன. அதாவது, இதுவரை நடந்த பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மானாமதுரை, விளாத்திகுளம், திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி, பூந்தமல்லி உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஏழு முறை நடந்த பேரவைத்  தேர்தலில் 5 முறைக்கு மேல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

2009ம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் ஆம்பூர் தொகுதிகளிலும் 2011, 2016 தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. இதை மட்டும் வைத்துப் பார்த்தால் குறைந்தபட்சம் 10 அல்லது 11 தொகுதிகளை அதிமுக கைப்பற்றுவது உறுதி.

ஆனால், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னற்றக் கழகம், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை எல்லாம் அறுவடை செய்யும் பட்சத்தில், இது திமுகவுக்கு சாதகமாக மாறும். அப்படி நடந்தால்.. அது சிக்கல்தான்.

திமுகவை எடுத்துக் கொண்டால் திருவாரூர் மற்றும் சாத்தூர் தொகுதிகளைத் தவிர வேறு எதிலும் வெற்றி வாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இல்லை.  இது தவிர மற்ற தொகுதிகள் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வெற்றி பெற்றவையாக இருக்கின்றன. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் திமுகவை விட அதிமுக அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

இதில்லாமல், இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக மற்றும் பாமகவின் ஆதரவும் கிடைக்கும். இதே நிலை திமுகவுக்கு இருக்குமா என்றும், இத்தனைத் தொகுதிகளிலும் திமுக போட்டியிடுமா அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சில தொகுதிகளை ஒதுக்க நேரிடுமா என்பதும் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் 21 பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு சீராக இருப்பதை உணர முடிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com