செவ்வாய்க்கிழமை 21 மே 2019

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து: ஸ்டாலின் உறுதி

DIN | Published: 23rd February 2019 05:00 PM


ஓசூர்: மத்தியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் கல்விக் கடன், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என ஓசூரில் நடந்த கிராம ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில்,

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு பெருந்திரளாக வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தை கடந்த ஜனவரி 3ம் தேதி துவங்கினோம். நான் முதன்முதலில் திருவாரூர் தொகுதியில் புலிவதனம் ஊராட்சியில் தான் முதன்முதலில் துவக்கி வைத்தேன். இப்பொழுது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் முதல் 98 சதவிகிதம் ஊராட்சி சபைக்கூட்ட பணிகளை முடித்து விட்டோம் எப்படியும் இந்த மாதத்திற்குள் எல்லாவற்றையும் முடிக்கப் போகின்றோம். இப்படி ஊராட்சி சபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை கேட்டுக் கொண்டிருக்கின்றோம். நான் பெருமையோடு சொல்லுகின்றேன், தமிழ்நாடு அளவில் இல்லை, இந்திய அளவில் மட்டுமில்லை, உலகளவில் இதுபோன்ற ஊராட்சி சபைக் கூட்டங்களை யாரும் நடத்தியிருக்க மாட்டார்கள். அதை திமுக தான் இன்றைக்கு சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றது.

இந்த தொரப்பள்ளி ஊராட்சிக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. ஒரு சரித்திரம் இருக்கின்றது. அது உங்களுக்குத் தெரியும். மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பிறந்த ஊர். அப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தக் கிராமத்தில் இந்த ஊராட்சியில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன், பெருமைப்படுகின்றேன். மறைந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் 1972ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த போது இந்த ஊருக்கு அவர் வந்திருக்கின்றார். எதற்கு என்று கேட்டால், மூதறிஞர் இராஜாஜி அவர்களின் இல்லத்தை சீர்படுத்தி அதை அரசுடமையாக்கி தலைவர் கலைஞர் அவர்கள் தான் திறந்து வைத்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமல்ல, அன்றைக்கு இந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் எடுத்துவைத்த கோரிக்கை என்னவென்று கேட்டால், தொரப்பள்ளி வழியாக அரசுப் பள்ளிகள், பல தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆகவே, இந்த தொரப்பள்ளி வழியாக அரசுப் பேருந்து விடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை எடுத்து வைத்தார்கள். உடனே, தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கே உத்தரவு போட்டு அரசுப் பேருந்துகளை இந்தத் தொரப்பள்ளி வழியாக விட்டவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

அதேபோல, தொரப்பள்ளி அருகே தென்பண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் செய்து கொடுத்தவரும் அன்றைக்கு முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அப்போது இந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ யார் என்று கேட்டீர்கள் என்றால் இராஜாஜி கட்சியைச் சேர்ந்த பெரியவர் வெங்கடசாமி அவர்கள். இப்போது தி.மு.கவில் இருக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட, வரலாற்றிற்குரிய இந்த தொரப்பள்ளி ஊராட்சியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகின்றேன், பெருமைப்படுகின்றேன்.

உங்களை எல்லாம் இன்றைக்கு தேடி நாடி வந்திருக்கின்றோம். இது ஏதோ நாங்கள் பேசுவதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல, நீங்கள் பேசுவதற்காக நடத்துகின்ற கூட்டம். இங்கு கட்சித் தோழர்கள், கட்சி நிர்வாகிகள், எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் இங்கு பேசப்போவதில்லை, உங்களைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்கு பாதுகாப்பு தி.மு.க தான் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. உங்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கின்றேன். இப்படித்தான் எல்லா ஊராட்சி சபைக் கூட்டங்களையும் நடத்திக் கொன்டிருக்கின்றோம். அந்த முறையைத்தான் பின்பற்றி இங்கேயும் நடத்தப்போகின்றோம்.

இது, நீங்கள் பேசுவதற்கான கூட்டம் நாங்கள் பேசுவதற்கான கூட்டம் அல்ல. என்ன பேசப்போகின்றீர்கள்? எப்படி பேசப்போகின்றீர்கள்? உங்கள் சொந்தப் பிரச்னை பற்றியோ உங்களுக்குள் இருக்கும் பிரச்னை பற்றியோ அல்ல, நீங்கள் பேசப்போவது உங்கள் ஊர்ப் பிரச்னை இந்த கிராமத்து பிரச்னை இந்த ஊராட்சி பிரச்னை, அடிப்படை பிரச்னைகள் சுகாதார சீர்கேடு, பேருந்து வழித்தடம், குடிநீர், ஓ.ஏ.பி என்று சொல்லக்கூடிய முதியோர் உதவித்தொகை, பட்டாபிரச்னை, மருத்துவமனை, பள்ளிக் கட்டிடங்கள் இப்படி பலப் பிரச்னைகள் இருக்கிறது. இது உங்கள் கிராமத்தில் மட்டுமல்ல எல்லாக் கிராமத்திலும் இருக்கின்றது. காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், அ.தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பிறகு இந்த உள்ளாட்சித் தேர்தலை இன்னும் நடத்தாமல் இருக்கின்றது. இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டும் நடத்த முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது, ஏனென்றால், இந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் ஆளுங்கட்சி மேல் இருக்கக்கூடிய கோபத்தை மக்கள் காண்பித்து விடுவார்கள், காண்பித்தால் ஜெயிக்க முடியாது. திமுக தான் ஜெயித்து விடும். அதனால் தேர்தலே நடத்தாமல் சதித்திட்டம் போட்டு இன்னும் நடத்த முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் இப்படி ஒரு பெரிய குறை.  உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கின்றது.

குறிப்பாக, இந்த ஓசூர் தொகுதி காலியாக இருக்கின்றது என்று உங்களுக்கு முறையாக அறிவிப்பு வந்துவிட்டது. ஏன் இந்த தொகுதி காலியாக இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தொகுதியையும் சேர்த்து 21 தொகுதிகள் இப்பொழுது காலியாக இருக்கின்றது. நாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகின்றோம் அந்தத் தேர்தலை நடத்தியே தான் தீர வேண்டும். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அதில், நிச்சயமாக மோடி ஆட்சியை அப்புறப்படுத்தக்கூடிய சூழல் வந்துவிட்டது. மோடி ஆட்சி அப்புறப்படுத்தப்படுகின்ற போது திமுக தயவோடு, திமுக கூட்டணியில் மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி அமையப்போகின்றது. திமுகவால் அடையாளம் காட்டப்படுபவர் தான் இந்த நாட்டின் பிரதமராக வரப்போகின்றார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவாதில்லை. நீங்களும் அந்த உணர்வோடு தான் இருக்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்களும் அந்த நம்பிக்கையோடு தான் இங்கு வந்திருக்கின்றீர்கள். ஆகவே, நாடாளுமன்றத் தேர்தல் எப்படியும் ஏப்ரல், மே மாதத்திற்குள் முடிந்துவிடப் போகின்றது. தமிழ்நாடு முழுக்க இந்தியா முழுக்க நடைபெற்று முடியப்போகின்றது. அதிலும் மாற்றம் வரப்போகின்றது. இந்த எம்.பி எலெக்சனோடு 21 தொகுதிகளுக்கும் சேர்த்து எலெக்சன் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஒரு வருடமாக 18 தொகுதிகள் காலி, இப்பொழுது 3 தொகுதிகளும் சேர்ந்திருக்கின்றது. நியாயமாக வைத்தாக வேண்டும். தேர்தல் கமிசனுக்கும், அரசாங்கத்திற்கும் ஒரே செலவோடு முடியும். ஆனால், வைக்கின்றார்களா வைக்கவில்லையா என்பதிலும் ஒரு கேள்விக்குறி.

ஏனென்றால் தேர்தல் வைத்தால் அதிலும் அதிமுக தோற்றுப்போய் விட்டால் ஆட்சியில் இருக்க முடியாது. ஏனென்றால், மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி நிலையில் இன்றைக்கு ஆட்சி இருக்கின்றது. எனவே, அந்த நிலையில் தேர்தல் வைக்கின்றார்களா? வைக்கவில்லையா? என்பது தெரியாது. ஏனென்றால் இவர்கள் சொல்வதை தானே மோடி செய்கின்றார். மோடி இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கின்றார்கள் அது ஒரு பக்கம், எது எப்படி இருந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் நீங்கள் எல்லோரும் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை எல்லாம் தேடி நாடி நான் வந்திருக்கின்றேன். ஆகவே, உங்களுடைய குறைகளை எங்களிடம் தெரிவியுங்கள். நிச்சயம், அதற்கு நல்ல தீர்வை நாங்கள் உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம்.

 அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். தொரப்பள்ளி ஊராட்சியில் நீங்கள் சந்தித்து வருகின்ற பிரச்னைகளை எல்லாம் என்னிடத்திலே தெரிவித்திருக்கிறீர்கள். இங்கே பேசிய பல தாய்மார்கள் பொதுப் பிரச்னைகளைப் பற்றிச் சொன்னீர்கள். வயது முதிர்ந்த தாய்மார்கள் முதியோர் ஓய்வூதியத் தொகை சரிவர கிடைக்காமல் இருப்பது பற்றி இங்கே தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நிச்சயம் திமுக ஆட்சி அமைகின்ற நேரத்தில் கட்சி பாகுபாடு இன்றி குறிப்பிட்ட வயது எய்திய அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.

அடுத்து, கல்விக் கடனைப் பற்றிச் சொன்னீர்கள். கல்விக் கடனைப் பொறுத்தவரைக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வந்த போது திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால், நம்முடைய கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் வங்கிகளில் மாணவர்கள் வாங்கியிருக்கின்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் என்று உறுதியை அப்பொழுதே தந்தோம். ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சி அதைச் செய்யவில்லை. இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சி அதை செய்யவேண்டும் என்று சொல்லி வலியுறுத்தவும் இல்லை. ஆனால், இப்பொழுது நான் உறுதியாக சொல்லுகின்றேன். இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட நாங்கள் சொல்லப்போகிறோம். திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைகின்ற போது நிச்சயமாக மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அடுத்து விவசாயக் கடன் பற்றிச் சொன்னீர்கள். விவசாயிகள் ஆங்காங்கே தற்கொலை செய்துகொண்டு இறக்கக்கூடிய கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, அதைப்பற்றி மோடியும் கவலைப்படவில்லை, இங்கு இருக்கக்கூடிய எடப்பாடியும் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்போது 6000 வழங்குவோம், 2000 வழங்குவோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே மோடி அவர்கள், ஆட்சிக்கு வந்து 5 வருடம் முடியப்போகின்றது, வந்ததும் இதனைச் செய்திருந்தால் கூட பாராட்டியிருக்காலாம். ஆனால், இப்பொழுது பெட்ரோல் விலை என்ன? டீசல் விலை என்ன? எல்லாம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகரித்து போய்க்கொண்டிருக்கின்றது. விலைவாசி உயர்ந்துகொண்டே போய்க்கொண்டு இருக்கின்றது. அதைக் கட்டுப்படுத்த மோடி அவர்கள் என்ன செய்தார்?

மாநிலத்தில் இன்றைக்கு யாருடைய ஆட்சி நடைபெறுகின்றது, எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க ஆட்சி நடக்கின்றது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லியா அன்றைக்கு ஓட்டுப் போட்டீர்கள்? இல்லை. ஜெயலலிதா முதலமைச்சராக வரவேண்டும் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டீர்கள்.

பெரிய வித்தியாசம் ஒன்று இல்லை 1.1 சதவிகிதம் தான். திமுக ஆட்சியில் இல்லாவிட்டால் கூட, நமக்கும் அவர்களுக்கு ஓட்டு வித்தியாசம் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், 1.1 சதவிகிதம் தான். 1 சதவிகிதம் கூட வாங்கியிருந்தால் இன்றைக்கு நாம் ஆட்சியில் இருந்திருப்போம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இந்த ஊராட்சி சபைக் கூட்டத்தை யார் கூட்ட வேண்டும்? ஆட்சியில் இருப்பவர்கள் கூட்ட வேண்டும், அல்லது அமைச்சர்கள் கூட்ட வேண்டும். அல்லது, அரசுத்துறை அதிகாரிகள் கூட்ட வேண்டும், அதைக் கூட்ட இந்த ஆட்சிக்கு யோக்கியதை இல்லை, துப்பில்லை, துரும்பில்லை உங்களுக்கு. அதனால், எதிர்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க இன்றைக்கு இந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றது. எடப்பாடி இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் ஜெயலலிதா காலில் விழுந்தது மட்டுமல்ல, சசிகலா காலில் விழுந்து அல்ல தவழ்ந்து மண்புழு போவது போல் தவழ்ந்து முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக நமக்கு எதிரி தான். ஆனால், முதல்வராக இருந்து மறைந்தவர் அவர். அதுவும் மர்மமான முறையில் இறந்தவர் அவர். அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் திமுக ஆட்சியில் சிறையில் தள்ளப்படுவார்கள்.

இன்றைக்கு உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு இந்த ஆட்சியில் நடக்கக்கூடிய கொடுமைகள் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியும். உங்கள் ஊர்ப் பிரச்னைகளைப் பற்றி நிறைய சொன்னீர்கள். அதேபோல், நாட்டுப் பிரச்னையையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. நாடு நன்றாக இருந்தால் நம்முடைய ஊர் நன்றாக இருக்க முடியும். நம்முடைய ஊர் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். நாம் நன்றாக இருந்தால் தான் நம்முடைய சந்ததிகள் நன்றாக இருக்க முடியும். ஆகவே, நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது. மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சியை நாம் அமைத்தே தீர வேண்டும்.

நேற்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் மதிப்பிற்குரிய அமித்சா அவர்கள் தமிழ்நாட்டில், மதுரைக்கு வந்திருக்கின்றார், மதுரைக்கு அருகில் அவருடைய கட்சியினுடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். கலந்து கொள்ளட்டும் அதை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. அங்கு சென்று என்ன சொல்லியிருக்கின்றார் என்றால், இன்றைக்கு நம்முடைய பாஜகவுக்கு எதிராக அமைந்துள்ள நம்முடைய கூட்டணி கட்சித் தலைவர்களையெல்லாம் பார்த்து கிண்டல் செய்து கேலி செய்து பேசியிருக்கின்றார். அவர் என்ன பேசியிருக்கின்றார் என்றால், யார் பிரதமர் என்று கூட சொல்ல முடியவில்லை. எதிரில் அமைந்திருக்கக்கூடிய கூட்டணிக்கு யார் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை என்று சொல்லிவிட்டு அதோடு விடவில்லை.

திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொருவர் பெயரைச் சொல்லி அவர்கள் தான் முதல்வர் என்றும், சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பிரதமர் என்று சொல்லியிருக்கின்றார். என் பெயரை ஞாபகமாக வைத்து சொன்னதற்கு அமித்சாவிற்கு நன்றி. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு விடுமுறையாம் ஏனென்றால் அன்றைக்கு பிரதமர் கிடையாதாம். இப்பொழுது இந்தியாவில் பிரதமருக்கு நிரந்தரமாக விடுமுறை. ஏனென்றால், பிரதமர் நாட்டில் கிடையாது. அவர் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இது அமித்சாவிற்கு தெரியவில்லை, மோடி வரமாட்டார் என்பதை அமித்சா ஒத்துக்கொண்டார். நாங்கள் தான் பிரதமர்களாக வரப்போகின்றோம் என்று அவரே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார். அவருடைய தோல்வி அவருக்கே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கின்றது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. முதலில் நாட்டைக் காப்பாற்றுவோம். நாடு நன்றாக இருந்தால் தான் நம்முடைய பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே, நாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது. அப்படி வருகின்ற போது, மிகப்பெரிய வெற்றியை நம்முடைய கழகத்திற்கு தேடித்தர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். உங்கள் பிரச்னைகளை என்னிடத்தில் சொல்லியிருக்கின்றீர்கள், கவலைப்படாதீர்கள். நான் இருக்கின்றேன். எப்படி கருணாநிதி  இருக்கின்ற போது உங்களுடைய பிரச்னைகளை தீர்த்து வைத்தாரோ, அதேபோல் தீர்த்து வைக்க அவருடைய மகன் நான் இருக்கின்றேன். கருணாநிதி விட்டுச் சென்ற அந்தப் பணியை தொடங்குவதற்கு நான் இருக்கின்றேன், என்று சொல்லிக்கொண்டு என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன் என்றார்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரசு ஊழி​யர்​க​ளுக்கு 3 சத​வீ​தம் அக​வி​லைப்​படி உயர்வு
கமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன் வழங்கி உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு
அரசுப் பள்​ளி​கள் புது "டிவி' வாங்க வேண்​டும்: கல்​வித்​துறை உத்​த​ரவு
3 கோடி பிறப்பு - இறப்பு சான்​றி​தழ்​கள் ஆன்​லை​னில் பதி​வேற்​றம்: சுகா​தா​ரத் துறை முடிவு
கிராமத்தினரின் தாக‌ம் தீ‌ர்‌க்கும் விவ​சா​யி​யின் உன்னதப் பணி!