கடல் பசுக்களைப் பாதுகாக்க கடல் புற்கள் வளர்க்கத் திட்டம்

மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கயிற்றில் கடல் புற்கள் வளர்க்கும் திட்டம்
தஞ்சை, நாகை, ராமநாதபுரம் கடல் பகுதியில் கடல் புற்கள் வளர்ந்திருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம்.  (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள  கடல் புற்கள்).
தஞ்சை, நாகை, ராமநாதபுரம் கடல் பகுதியில் கடல் புற்கள் வளர்ந்திருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம்.  (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள  கடல் புற்கள்).


மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கயிற்றில் கடல் புற்கள் வளர்க்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக  உயிரின காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மன்னார் வளைகுடா பகுதியில் நாகை முதல் தூத்துக்குடி வரையில் 21 தீவுகள் உள்ளன. கடந்த 2015 ஆண்டுக்கு முன்பு நடந்த ஆய்வின்படி இங்கு சுமார் 254 சதுர கிலோ மீட்டரில் கடல் புற்கள் வளர்ந்திருந்தன.  இப்பகுதியில்  49 முதல் 153 வரையிலான கடற்பசுக்கள் இருந்ததாக கண்டறியப்பட்டன. 
கடல் பசுக்கள் உண்ணவும், அதைச் சார்ந்த சங்கு, கடல் தாமரை போன்றவை வாழவும் கடல் புற்கள் அவசியம். 
இந்நிலையில் இரட்டை மடி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டதால், கடல் புற்களின் பரப்பளவு குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, டேராடூன் கடல் பசுக்கள் மத்திய பாதுகாப்பு நிறுவனம் சார்பில், தொண்டியை மையமாக வைத்து கடல் பசுக்களை பாதுகாப்பது குறித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 
கடந்தாண்டு நடந்த ஆய்வில் கடல் புற்களின் பரப்பளவு  209 சதுர கிலோ மீட்டராக குறைந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டில் கடல் புற்கள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  ஒரு மீட்டர் அளவு பிளாஸ்டிக் குழாயை வடிவமைத்து, அதில் கடல் புற்கள் வளரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மண்டபத்தை ஒட்டியுள்ள தீவுப் பகுதிகளில் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 
இந்நிலையில் தற்போது கயிறுகளை கடல் தரையில் கட்டி வைத்து, அதில் கடல் புற்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி நாகை, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்ட கடல் பகுதியில் தலா 1 சதுர கிலோ மீட்டரில் கடல் புற்களை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ரூ.3.20 லட்சம் செலவில் 1 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு கடல் புற்கள் வளர்க்கும் திட்டம் அடுத்த மாதத்தில் செயல்படுத்தப்படும். மேலும் கடல் புற்கள் அழியாமல் பாதுகாக்க மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com