காவல்துறை பணியிட மாறுதலில் நீதிமன்றம் தலையிடமுடியாது

தமிழக காவல்துறையின் நிர்வாக ரீதியிலான பணியிட மாறுதலில் தலையிடுவது அந்த துறையின் நிர்வாக நடவடிக்கைகளை சீர்குலைத்து விடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  


தமிழக காவல்துறையின் நிர்வாக ரீதியிலான பணியிட மாறுதலில் தலையிடுவது அந்த துறையின் நிர்வாக நடவடிக்கைகளை சீர்குலைத்து விடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  
கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ஆர்.அனிதா. இவரை எண்ணூர் காவல் நிலையத்துக்கு இடமாறுதல் செய்து காவல்துறை இணை ஆணையர் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.அனிதா வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கடந்த 2012-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்ட மனுதாரர், 2013-2014ஆம் ஆண்டுகளில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திலும், 2014-ஆம் ஆண்டு மயிலாப்பூர் காவல் நிலையத்திலும், 2014-2017 வரை மெரீனா கடற்கரை காவல் நிலையத்திலும், பின்னர், ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் தற்போது எண்ணூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 
பொதுவாக தமிழகத்தில் எந்த இடத்துக்கு பணியிட மாறுதல் செய்தாலும், அங்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற பணி நிபந்தனையை ஏற்றுக் கொண்டுதான் பணியில் சேருகின்றனர். பணியிட மாறுதல் என்பது ஒரு நிபந்தனைதான். எந்த இடத்துக்கு இடமாறுதல் செய்தாலும் நிர்வாக பொதுநலன் கருதி அந்த இடங்களுக்குச் சென்று அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
 மனுதாரர் கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகரில் மட்டுமே பணியாற்றியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. பல ஆண்டுகளாக மனுதாரரான உதவி ஆய்வாளரை சென்னையில் மட்டுமே பணியாற்ற உயர் அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் என்பது புரியவில்லை. 
இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகரில் மட்டுமே பணியாற்றியுள்ளார். கோட்டூர்புரத்தில் இருந்து தற்போது எண்ணூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லை.
 மேலும் காவல்துறையின் நிர்வாக ரீதியிலான பணியிட மாறுதல் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அப்படி நீதிமன்றம் தலையிட்டால், அது அந்த துறையின் ஒட்டுமொத்த நிர்வாக ரீதியான நடவடிக்கையை சீர்குலைத்து விடும். காவல்துறையைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், பணிகளைச் சுமுகமாக மேற்கொள்ளவும், காவல்துறையின் ஒழுக்கத்தைப் பராமரிக்கவும் நிர்வாக ரீதியான பணியிட மாறுதல்களை உயர்அதிகாரிகள் மேற்கொள்வார்கள். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்த இடமாறுதல் தொடர்பாக மனுதாரருக்கு தனிப்பட்ட கோரிக்கை ஏதாவது இருந்தால் உயர்அதிகாரிகளிடம் முறையிட அவருக்கு உரிமை உள்ளதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com