அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது என திருவள்ளூர் அருகே நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது என திருவள்ளூர் அருகே நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
 திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுகவின் பூந்தமல்லி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஜமீன் கொரட்டூர் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் பேசியது: மாநில அளவில் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கடந்த ஜன.3-ஆம் தேதி முதல் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் திருவாரூர், திருப்பரங்குன்றம், ஒசூர் என மொத்தம் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுடன் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் அனாதையாக விடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியாக பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு வருகிறேன். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் குறைபாடுகளும் இருந்திருக்காது. இதுபோன்ற ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். 
தற்போது அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி அமைத்துள்ளது. இதில், பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பாஜக ஏதோ நிர்ப்பந்தத்தின் பேரில் மிரட்டியே அதிமுகவை பணியவைத்துள்ளது. அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அதிமுக அரசின் ஊழலை புத்தகமாக வெளியிட்டவர்கள். அத்துடன், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அழிக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். தற்போது கூட்டணி வைத்துள்ளனர். யார், யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை அசைக்கவோ, தோற்கடிக்கவோ முடியாது. 
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உள்ளிட்ட குறிப்பிட்ட வயதை அடைந்தவர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி உதவித் தொகை  வழங்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.  கூட்டத்தில், மாநில சட்டப்பிரிவு இணைச்செயலர் பரந்தாமன், தெற்கு மாவட்டச் செயலர் சா.மு.நாசர், திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com