ஓமந்தூரார் மருத்துவமனையில் பிஇடி கருவி இல்லாததால் நோயாளிகள் அவதி

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோயைக் கண்டறியும் பிஇடி ஸ்கேன் கருவி (POSITRON EMMISSION TOMOGRAPHY) இல்லாததால்,
ஓமந்தூரார் மருத்துவமனையில் பிஇடி கருவி இல்லாததால் நோயாளிகள் அவதி


ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோயைக் கண்டறியும் பிஇடி ஸ்கேன் கருவி (POSITRON EMMISSION TOMOGRAPHY) இல்லாததால், நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அப்பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய  சிரமம் நீடிக்கிறது.
ஓமந்தூரார் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கு பிரபலமான ஒன்று. தற்போது மாதந்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை துறை, அறுவை சிகிச்சை துறை, கதிரியக்க சிகிச்சை துறை என மூன்று துறைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. இதற்காக பல கோடி மதிப்புடைய அதி நவீன மருத்துவ சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அண்மையில் கூட ரூ.18 கோடி செலவில் ட்ரூ பீம் ரேடியேசன் தெரபி சாதனம் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டது. மிகத் துல்லியமான புற்றுநோய்க் கட்டிகளைக் கூட அதன் மூலம் அகற்ற முடியும். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க இதுபோன்ற அதி நவீன சாதனங்கள் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டாலும்,  அந்த நோயை கண்டறிவதற்கான பிஇடி ஸ்கேன் சாதனம் அங்கு இல்லை என்பது  விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
உடலின் எந்தப் பாகத்திலும் புற்று நோய் பாதிப்பை எளிதில் கண்டறியக்கூடிய  முக்கியமான இக்கருவியை வாங்குவதற்காக, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே   ஒப்புதல் அளிக்கப்பட்டும், இன்றளவும் அதற்கான நிதி விடுவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதுமட்டுமன்றி, பிஇடி   ஸ்கேன்  கருவியை  நிறுவுவதற்காக ரூ.5 கோடி செலவில் ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரத்யேக கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதற்கான கருவி நிறுவப்படாததால்  பயனின்றி  இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே,  தாமதமின்றி   அக்கருவியை  கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென  நோயாளிகள் மற்றும் பொது மக்கள்  வலியுறுத்துகின்றனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ரூ.20 கோடி செலவில் பிஇடி ஸ்கேன் கருவி கொள்முதல் செய்யப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் அறிவித்தார்.  அடுத்த சில நாள்களில் அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. 
ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்று வரை அந்த சாதனத்தை வாங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.  புற்றுநோயைக் கண்டறியும் பிஇடி ஸ்கேன் கருவி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளதால், ஓமந்தூரார் மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகள் பலரும், தனியார் மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அப்பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை, எளிய மக்கள், பல ஆயிரம் செலவழித்து பரிசோதனை மேற்கொள்வது  நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றாகும் எனவும், இப்பிரச்னைக்கு ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை உடனடியாக அமல்படுத்துவதுதான் ஒரே தீர்வு  என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மாநில மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத் கூறியதாவது:பிஇடி ஸ்கேன் சாதனங்களைப் நிறுவுவதற்கு முன்பாக அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரிய ஒப்புதல் பெறுவது அவசியம். 
அதன்படி அந்த அனுமதியைப் பெற்று சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் முதல்கட்டமாக அந்த சாதனங்கள் நிறுவப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவனையில் அந்த சாதனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com