மறுமதிப்பீட்டில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு பணம் திரும்ப தரப்படுமா?: அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் திருத்தத்தில் மீண்டும் குளறுபடி

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுத் தாள் திருத்தத்தில் மீண்டும் குளறுபடி நடைபெற்றிருப்பதாகவும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தோல்வியடைந்ததாக பல்கலைக்கழகம் அறிவித்திருப்பதாகவும்
மறுமதிப்பீட்டில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு பணம் திரும்ப தரப்படுமா?: அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் திருத்தத்தில் மீண்டும் குளறுபடி


அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுத் தாள் திருத்தத்தில் மீண்டும் குளறுபடி நடைபெற்றிருப்பதாகவும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தோல்வியடைந்ததாக பல்கலைக்கழகம் அறிவித்திருப்பதாகவும் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெறும் அல்லது அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை பல்கலைக்கழகம் திரும்ப அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2018 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளில் எங்கள் கல்லூரியிலிருந்து 1164 மாணவ, மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
தோல்வியடைந்த மாணவர்கள் தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக தாள் ஒன்றுக்கு ரூ. 300 செலுத்தி, விடைத்தாள் நகல் பெற்று, கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, தோல்வியடைந்ததாக கூறப்பட்ட மாணவர்களில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருப்பதும், அவர்களில் சிலர் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
தேர்வுத்தாள் திருத்தத்தில் குளறுபடி: இந்த குளறுபடிக்கு, பல்கலைக்கழகத் தேர்வுத்தாள் திருத்தும் பணியின்போது பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் விடைக் குறிப்பேடு (விடை கீ) தவறாகக் கொடுக்கப்பட்டதே முக்கியக் காரணம் என எங்கள் கல்லூரியிலிருந்து தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குச் சென்ற பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுபோன்று பல்கலைக்கழகம் செய்யும் தவறுக்கு, விடைத்தாள் நகலுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 300, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க தாள் ஒன்றுக்கு ரூ. 400 என கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, மாணவர் நலன் கருதி, இந்தக் குளறுபடிக்கு விரைவில் உரியத் தீர்வை பல்கலைக்கழகம் காண வேண்டும் என்றார்.
பணத்தைத் திரும்பத் தரவேண்டும்: இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது:
விடைத்தாள் திருத்தும் பணியில் இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களும், கல்லூரிகளின் நற்பெயரும்தான்.
தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் பேராசிரியர்கள் செய்யும் தவறுக்கு, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டில்,  அதிக மதிப்பெண் பெறும் அல்லது அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மறுமதிப்பீட்டுக் கட்டணம் முழுவதையும் பல்கலைக்கழகம் திரும்ப அளிக்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இதுபோல அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பணத்தைத் திரும்பத் தரும்போது, அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் இந்த நடைமுறையை பின்பற்ற மறுப்பது ஏற்புடையதல்ல. அதோடு, இந்தத் தவறுக்குக் காரணமான, தேர்வுத்தாள் திருத்திய பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தவறு தொடராமல் இருக்கும்.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய... மறுமதிப்பீடு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் எத்தனை மாணவர்கள் அதிக மதிப்பெண் அல்லது தேர்ச்சி பெற்றனர் என்ற விவரத்தை பல்கலைக்கழகம் வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
மேலும், பள்ளி கல்வித் துறையில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் ஆன்-லைனில் அனுப்பப்படுவதுபோல, அண்ணா பல்கலைக்கழகமும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி விடைத்தாள் நகலை ஆன்-லைனில் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது அதற்கான கட்டணத்தையும் குறைக்க முடியும்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் கூறியது:
மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் அல்லது தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தைத் திரும்பத் தரும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை. எனவே, அந்தக் கட்டணம் யாருக்கும் திரும்பத் தரப்பட மாட்டாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com