மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விரைவில் வரவுள்ள மக்களவைத்  தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே, விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை திட்டத்தை பிரதமர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்துள்ள பள்ளப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்துள்ள பள்ளப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


விரைவில் வரவுள்ள மக்களவைத்  தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே, விவசாயிகளுக்கு ரூ.6ஆயிரம் உதவித் தொகை திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான  தமிழக அரசும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த நரேந்திர மோடி, மக்களின் வளர்ச்சிக்கான எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.  கருப்பு பணத்தை மீட்டு, மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அவர், இன்று வரை ரூ.15 கூட செலுத்தவில்லை. மாறாக பொதுமக்கள் கையிலிருந்த  பணத்தை மதிப்பிழக்கச் செய்து, நெருக்கடியை ஏற்படுத்தினார். விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு 
ரூ.6 ஆயிரம் தருவதாக அறிவித்துள்ளார்.  அதேபோல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2ஆயிரம் தருவதாக எடப்பாடி கே. பழனிசாமியும் அறிவித்துள்ளார்.  மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காகவே இந்த பணத்தை  வழங்குகின்றனர். இந்த பணமும், அதிமுகவினருக்கு மட்டுமே  கிடைக்கும். புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படாததால், வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. 
ஜெயலலிதா மறைவுக்குப் பின் மைனாரிட்டி ஆட்சியாக மாறிவிட்டபோதிலும், பதவியை காப்பாற்றுவதில் மட்டுமே எடப்பாடி கே. பழனிசாமி கவனம் செலுத்தி வருகிறார். 
அதனால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு அவருக்கு நேரமில்லை. 
பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் உருவாக்கத் தேவையில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றிருந்தால், இந்த வசதிகளை எளிதாக நிறைவேற்றிக் கொடுத்திருக்க முடியும். ஆனால், ஆளும் கட்சி வெற்றி பெற முடியாது என்ற காரணத்தால், தேர்தலை  நடத்தவில்லை. 
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். நிறுத்தப்பட்டுள்ள முதியோர் ஓய்வூதியத் திட்டம், அதிமுகவினர் உள்பட அனைத்து தகுதியான நபர்களுக்கும் வழங்கப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.  பொதுமக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வினை ஏற்படுத்தி தருவோம் என்றார். 
முன்னதாக காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப் படை வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்  ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன், எம்எல்ஏக்கள் அர.சக்கரபாணி, பெ.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com