புதுவை முதல்வரின் போராட்டம் 3-ஆவது நாளாக நீடிப்பு

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும்
புதுவை முதல்வரின் போராட்டம் 3-ஆவது நாளாக நீடிப்பு


புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
அரசு நிர்வாகத்தின் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வரும் ஆளுநர் கிரண் பேடி, கடந்த 11-ஆம் தேதி முதல் கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்தினார். இதனால், முதல்வர் நாராயணசாமி, பிப். 13-ஆம் தேதி பிற்பகல் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகை எதிரே தர்னாவில் ஈடுபடத் தொடங்கினார்.
ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் காங்கிரஸார் முற்றுகையிட்டதால்,  துணை ராணுவத்தினரின் உதவியுடன் ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை கார் மூலமாக சென்னைக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து அவர் தில்லிக்குச் சென்றுவிட்டார்.
இருப்பினும், முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து ஆளுநர் மாளிகை எதிரிலேயே அமர்ந்து, மூன்றாம் நாளாக தர்னாவை தொடர்ந்து வருகிறார். அவருடன் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புக்காக துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராட்டப் பகுதியை  தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டத்தின் போது, முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய போராட்டத்தை ஆளுநர் கிரண் பேடி தற்போது வரை நீட்டிக்கச் செய்துள்ளார். கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வருகிற 21-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி தில்லிக்குச் சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து, தங்களின் 39 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்.
மேலும், பிரச்னைக்குத் தீர்வு காணாமல், அவர் தில்லிக்குச் சென்றுள்ளது கண்டனத்துக்குரியது. இங்கு, அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால், உடனடியாக பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். ஆளுநர் இங்கு இல்லாததால், மத்திய அரசு உடனடியாக இடைக்கால ஆளுநரை நியமித்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தொலைபேசியில் ஒப்புதல் அளித்தால்கூட போராட்டத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்றார் அவர்.
தொடர்ந்து, நண்பகல் ஒரு மணியளவில் போராட்டக் களத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுவைக்கான கட்சி மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத், தனது ஆதரவைத் தெரிவித்து தர்னாவில் பங்கேற்றார். இதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் வெள்ளிக்கிழமை மாலை வந்து ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக, காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்த துணை ராணுவப் படையினருக்காக போராட்டக் களத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com