பிடிபட்டது சின்னத்தம்பி யானை!

உடுமலை அருகே கடந்த 15 நாள்களாக முகாமிட்டிருந்த சின்னத்தம்பி யானை இரண்டு கும்கிகள் உதவியுடன் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.  
பொதுமக்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் சின்னத்தம்பி.
பொதுமக்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் சின்னத்தம்பி.


உடுமலை அருகே கடந்த 15 நாள்களாக முகாமிட்டிருந்த சின்னத்தம்பி யானை இரண்டு கும்கிகள் உதவியுடன் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.  
கோவை, சின்னத் தடாகம் பகுதியில் விளை நிலங்களைச் சேதப்படுத்தி வந்த சின்னத்தம்பி யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ஆனால், அந்த யானை பிப்ரவரி 1 ஆம் தேதி, திருப்பூர் மாவட்டம்,  உடுமலை வட்டத்தினுள் நுழைந்தது. அங்கிருந்து பல்வேறு கிராமங்களில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த சின்னத்தம்பியை வனத் துறையினர் விரட்டியதால் கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் தஞ்சம் அடைந்தது. அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் சின்னத்தம்பியைப் பிடிக்க தமிழக வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் பிப்ரவரி 13 ஆம் தேதி அனுமதி வழங்கியது. சின்னத்தம்பி யானையைப் பிடிக்கும்போதும், லாரியில் ஏற்றும்போதும் எவ்வித காயங்களும் ஏற்படக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சின்னத்தம்பியைப் பிடிக்கும் பணியை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்குத் தொடங்கினர். 
அங்குள்ள கரும்புக் காட்டில் தூங்கிக் கொண்டிருந்த சின்னத்தம்பி, கும்கி யானைகளின் உதவியுடன் திறந்தவெளிக்கு  தள்ளி வரப்பட்டது.
பின்னர் காலை 8 மணிக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. மூன்றாவது முயற்சியில் சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கும்கிகள் கலீம், சுயம்பு மற்றும் வனத் துறை ஊழியர்கள் உதவியுடன் சின்னத்தம்பியை அரை கி.மீ. தொலைவில் உள்ள வாழைத் தோட்டத்துக்கு காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். மயக்க நிலையில் இருந்த சின்னத்தம்பி இரண்டு கும்கிகளுக்கு இடையே நிறுத்தப்பட்டது. அதனைக் கயிறுகளைக் கொண்டு கட்டினர். 
பின்னர் கும்கி யானைகளின் உதவியுடன் சின்னத்தம்பியை முன்னுக்குத் தள்ளியும், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கயிறுகள் மூலம் இழுத்தும் லாரியில் ஏற்ற முயற்சித்தனர். முன்னதாக சின்னத்தம்பியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ காலர் கருவியை வனத் துறையினர் அகற்றினர்.
மயக்க நிலையில் இருந்த சின்னத்தம்பியை 25 நிமிட போராட்டத்துக்குப் பிறகு லாரியில் ஏற்றினர். அப்போது,  அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் உற்சாகத்துடன் சின்னத்தம்பியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் லாரி மூலம் டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
சின்னத்தம்பியைப் பிடிக்கும் பணிகளை நேரில் காண கண்ணாடிப்புத்தூர் கிராமத்துக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத் துறையினரும், போலீஸாரும் திணறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com