தங்கம் விலை கடும் உயர்வு: நடுத்தர மக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கடுமையாக உயர்ந்தது. ஒரு பவுனுக்கு ரூ.224 உயர்ந்து  ரூ.25,384-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை கடும் உயர்வு: நடுத்தர மக்கள் அதிர்ச்சி


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கடுமையாக உயர்ந்தது. ஒரு பவுனுக்கு ரூ.224 உயர்ந்து  ரூ.25,384-க்கு விற்பனை செய்யப்பட்டது.     தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக  நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் என்று தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல்,  உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை  நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து படிப்படியாக உயர்ந்தது. கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,905-ஆகவும், ஒரு பவுன் தங்கம்  ரூ.23, 240 ஆகவும் இருந்தது. தொடர்ந்து, டிசம்பர் 8-ஆம் தேதி  ஒரு பவுன் தங்கம் ரூ.24,080 ஆக  உயர்ந்தது. 
அதன்பிறகு, நிகழாண்டில் ஜனவரி 28-ஆம் தேதி வரலாறு காணாத வகையில், ஒருபவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தைத் தாண்டியது. அன்றைய நாளில்,  ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, 25,016-க்கு விற்பனை செய்யப்பட்டது.  
அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. பிப்ரவரி 2-ஆம் தேதி மேலும் உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.25,552 ஆக இருந்தது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்து வந்தது. 
மீண்டும் உயர்ந்தது: இந்த நிலையில், தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் உயர்ந்தது. சென்னையில் ஒரு பவுனுக்கு ரூ.224 உயர்ந்து  ரூ.25,384-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.3,173- ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது.  வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.43.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 
உயர்ந்து ரூ.43,100 ஆகவும் இருந்தது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமணம் உள்பட பல்வேறு சுபநிகழ்ச்சிக்கு நகை வாங்கும் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது:
அமெரிக்காவில் உற்பத்தி குறியீடு சரிவு, பொருளாதாரத்தில் பின்னடைவு, பெரும் அளவில் வேலைநிறுத்தம், அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றம் போன்ற காரணங்களால் அங்குள்ள பெரிய முதலீட்டாளர்கள், மற்ற வர்த்தகம் சார்ந்த பங்குசந்தையில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் பெரிய அளவில்  முதலீடு செய்கின்றனர். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்கிறது. இதன்தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்கிறது. இதனால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்        3,173
1 பவுன் தங்கம்      25,384
1 கிராம் வெள்ளி    43.10
1 கிலோ வெள்ளி     43,100
வியாழக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,145
1 பவுன் தங்கம்    25,160
1 கிராம் வெள்ளி    42.80
1 கிலோ வெள்ளி    42,800.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com