ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: 302 பேர் புகார் அளித்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் 302 பேர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் சென்னை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் 302 பேர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக, உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்கவே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை தற்போது,  மாறுபட்ட கோணத்தில் செல்கிறது. எங்களது மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் போதுமான ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 21 துறைகளைச் சேர்ந்த தன்னிச்சையான மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.  அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக விசாரணை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில்,  இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: இந்த ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை ஆணையத்திடம் அளித்த பட்டியலில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது. வி.கே.சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்தபோதும் நியாயமான வாய்ப்புகள் அப்பல்லோ மருத்துவமனை தரப்புக்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்லாது அவருக்கு கடைசி நிமிடம் வரை வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. விசாரணை ஆணையத்தின் விசாரணையைத் தடுக்கும் நோக்கத்தில் தான் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மரணம் அடைந்த டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் 302 பேர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இவர்களில் 30 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை ஆணையத்தில் இதுவரை 56 மருத்துவர்கள், 22 மருத்துவமனைப் பணியாளர்கள் என மொத்தம் 147 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது.
மேலும் ஆணையத்தின் முன் ஆஜரான மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள சில மருத்துவக் கலைச் சொற்கள் தட்டச்சின்போது பிழையாக பதிவாகியிருக்கிறதே தவிர மருத்துவமனை குற்றம்சாட்டுவதைப் போல எதையும் திரித்துப் பதிவு செய்யவில்லை.
மேலும் இந்த ஆணையத்தை எதிர்த்து ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com