ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம்: தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என கேள்வி 

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அக்கறை காட்டவில்லை என  மத்திய தொல்லியல் துறைக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா?


ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அக்கறை காட்டவில்லை என  மத்திய தொல்லியல் துறைக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
 தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மேலும்,  தூத்துக்குடி, சிவகளை, பரம்பு பகுதியிலும் அகழ்வாராய்ச்சி நடத்தக் கோரியும் அவர் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரரின் வழக்குரைஞர், தமிழகத்தை மத்திய தொல்லியல் துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அகழாய்வுப் பணிக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும், இதுவரை அகழாய்வு குறித்த  அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக, நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை.
தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அலுவலர் சத்தியமூர்த்திக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சத்தியமூர்த்திக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருள்களின் வயதை கண்டறியும் கார்பன் டேட்டிங் சோதனைக்காக அவற்றை புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. இவற்றைப் பார்க்கும்போது தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருப்பதுபோல் தெரிகிறது.
வெளிநாடுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அந்த நாடு தூக்கி வைத்து கொண்டாடும். அந்தப் பகுதியைப் பாதுகாக்கும். ஆனால், மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என்றார்.
மத்திய அரசு வழக்குரைஞர் இதுகுறித்து பதில் அளிக்கையில், அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு எவ்வித பாகுபாடும்  பார்க்கவில்லை. இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின் தமிழக உயர்அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை பிப். 18ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com