அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு: மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு: மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நெஞ்சு சளி, தொண்டை வலி, இதயம் மற்றும் புற்றுநோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில் இல்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. அதேபோன்று நீரிழிவு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்தும், ஆன்டிபயாடிக் போன்ற நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு  இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும், மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மருத்துவமனை மருந்தகங்களில் கிடைப்பதில்லை என்றும் நோயாளிகள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக வெளியே உள்ள மருந்துக் கடைகளில் பணம் கொடுத்து மாத்திரைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மருத்துவப் பணிகள் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான வேதிப்பொருள்களில் 80 சதவீதம் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசு காரணமாக சில வேதிப் பொருள்களைத் தயாரிப்பதை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மூலக்கூறு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை தமிழகத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ளது. டெஃப்லாக்ஸின், எரித்ரோமைசின், கேஃபோடாக்ஸின் போன்ற மூலக்கூறு மருந்துகளுக்கு தமிழகத்தில் பற்றாக்குறை உள்ளது.
இதற்குத் தீர்வு காணும் நோக்கில், அந்த மருந்துகளை உள்ளூர் சந்தையில் வாங்கிக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 வகையான மருந்துகளுக்கு அத்தகைய ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பிற மாநிலங்களில் 30 அல்லது 40 மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதை ஒப்பிடும்போது தமிழகத்தின் நிலை மோசமானதாக இல்லை.
விரைவில் நிலைமை சரியாகும்: இதனிடையே, அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை விநியோகிக்க புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தேவைப்படும் மருந்துகளுக்கு ஆர்டர் கொடுக்கப்படும். சீன பிரச்னையால், மூலக்கூறு மருந்துகளின் விலை உயர்ந்திருப்பதால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட விலையுடன் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 4 வாரங்களுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com