ஹெச்.ஐ.வி., காசநோய் பரிசோதனைக்கு நவீன வாகனங்கள்

மாநில அளவில் ஹெச்.ஐ.வி.யின் தாக்கத்தைக் குறைக்கவும், காசநோய் தொற்றுகளை 2020-க்குள் முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெச்.ஐ.வி., காசநோய் பரிசோதனைக்கு நவீன வாகனங்கள்


திருவள்ளூர்:  மாநில அளவில் ஹெச்.ஐ.வி.யின் தாக்கத்தைக் குறைக்கவும், காசநோய் தொற்றுகளை 2020-க்குள் முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

முகாம்கள் மூலம் ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குதலுக்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஹெச்.ஐ.வி. தாக்கம் அதிகமாக இருந்தது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் நடத்திய  பரிசோதனைகளால் ஹெச்.ஐ.வி. பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்தாண்டு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஆயிரம் பேருக்கு 4 ஆக இருந்த நிலையில் தற்போது 3 ஆகக் குறைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அளவில் எய்ட்ஸ் குறித்து குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு கிராமங்களிலும் நடமாடும் நவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் ஹெச்.ஐ.வி. தொற்று மற்றும் காசநோய் பாதிப்புகள் குறித்து நேரில் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவரும் தங்களின் உடல் நிலை குறித்து  முழுமையாக அறிந்து கொள்ள முடியும். 

இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி கெளரிசங்கர் கூறியது: ஹெச்.ஐ.வி. மற்றும் காசநோய் தொற்றை தடுக்கும் வகையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்கள் உடல் நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதை மையமாக வைத்து கிராமங்கள் தோறும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக புதுதில்லியில் இருந்து நவீன வசதியுடன் கூடிய 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் உள்ள கருவிகள் மூலம் ஹெச்.ஐ.வி. தொற்று, காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை உடனே அறிந்து கொள்ள முடியும். முதல் கட்டமாக திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் இருந்து இந்த நவீன வாகனங்கள் திங்கள்கிழமை (பிப். 4) புறப்பட்டுச் செல்ல இருக்கின்றன. 

இந்த வாகனத்தில் மருத்துவ நிபுணர், தொழில்நுட்ப உதவியாளர், செவிலியர், பணியாளர்கள் ஆகியோர் இருப்பர். இந்த வாகனங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராமங்களில் மே. 20 -ஆம் தேதிக்குள் பரிசோதனைகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பரிசோதனையின் அறிக்கையை தமிழக அரசு மூலம் புதுதில்லிக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com