தென்காசி மாவட்டம் வலுப்பெறும் கோரிக்கை

பல்வேறு நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை கருத்தில்கொண்டும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின்
தென்காசி மாவட்டம் வலுப்பெறும் கோரிக்கை

தென்காசி: பல்வேறு நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை கருத்தில்கொண்டும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் விருப்பமாகும்.

தற்போது விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, தென்காசி தனி மாவட்ட கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதிக்காக பல்வேறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்போதே தென்காசி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுநாள்வரையிலும் தனி மாவட்டம் அமைக்கப்படவில்லை.

தமிழகத்தின் தென்பகுதியில் 6823 ச.கி.மீ. பரப்பளவில் திருநெல்வேலி மாவட்டம் அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிஇம்மாவட்டத்தின் மக்கள்தொகை 30 லட்சத்து 72 ஆயிரத்து 880 ஆகும். இம்மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகள் திருத்தியமைக்கப்பட்ட பின்னர் தென்காசி, கடையநல்லூர், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி ஆகிய 10 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகிரி, நான்குனேரி, ராதாபுரம், வீரகேரளம்புதூர், ஆலங்குளம், கடையநல்லூர், திசையன்விளை, திருவேங்கடம், மானூர், சேரன்மகாதேவி ஆகிய 16 வட்டங்கள் அமைந்துள்ளன.

சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய முதல்நிலை நகராட்சிகளும், செங்கோட்டை, புளியங்குடி ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகளும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகளும் மாவட்டத்தில்அமைந்துள்ளன. இதுதவிர 19 ஊராட்சி ஒன்றியங்களும், 36 பேரூராட்சிகளும், 3 சிறப்புநிலை பேரூராட்சிகளும், 425 ஊராட்சிகளும் அமைந்துள்ளன.

கோரிக்கை ஏன்?: திருநெல்வேலி மாவட்டத்தின் பரப்பளவு மிகவும் பரந்து விரிந்ததாகும். கேரள எல்லையான கோட்டைவாசல் பகுதிக்கும் மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலிக்கும் இடையே 85 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. அதேபோல் மாவட்டத்தின் மற்றொரு எல்லையான சிவகிரிக்கும், திருநெல்வேலிக்கும் இடையே 95 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.

அனைத்து மாவட்ட அலுவலகங்களும் திருநெல்வேலியில்தான் அமைந்துள்ளன. எல்லைப் பகுதி கிராம மக்கள் மாவட்ட தலைநகருக்கு வரவேண்டுமானால் குறைந்தபட்சம் 3 மணிமுதல் 4 மணி நேரம் வரை ஆகும். 

மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக செல்ல வேண்டுமானாலும் இதே நிலைதான். பொதுமக்களின் நலன் கருதியும், அரசின் நிர்வாக வசதிக்காகவும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்காசி அமைந்துள்ளது. வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாண்டிய மன்னர்களான அதிவீரராமபாண்டியன், பராக்கிரமபாண்டியன் ஆகியோர் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டை, புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் ஆகியவை தென்காசி மாவட்டத்தில் இடம்பெறுவது மிகச் சிறப்பானதாக அமையும். தென்காசி மாவட்டம் அமைக்கப்படுமேயானால் அம்மாவட்டத்தின் மக்கள்தொகையானது  கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் மக்கள்தொகையைவிட அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி மாவட்டம் அறிவிக்கப்பட்டால் அந்த மாவட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் நிலை உருவாகும். இதனால் நலத் திட்டங்கள் மக்களிடம் விரைவாக சென்றடையவும்; அனைத்து கிராமங்களும் சமச்சீராக வளர்ச்சியடையும்; அரசுக்கும் நிர்வாகரீதியாக வசதியாக இருக்கும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீ.கருப்பசாமிபாண்டியன், சரத்குமார் ஆகியோர் பலமுறை சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்ட 33ஆவது மாவட்ட அறிவிப்பு ஜனவரி 8-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, தென்காசி மாவட்ட கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

வாஞ்சி இயக்கம்: வாஞ்சி இயக்க நிறுவனர்- தலைவர் பி.ராமநாதன்கூறியதாவது: நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் தலைவர்களின் பெயரில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தபோதே இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், செங்கோட்டையை  சேர்ந்தவருமான வாஞ்சிநாதனின் பெயரில் தென்காசி மாவட்டம்அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அதற்காக தொடர்ந்து போராடிவருகிறோம். திமுக ஆட்சியில் தலைவர்களின் பெயரில் மாவட்டங்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டதும், தென்காசியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக போராடி வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

திமுக: திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் கூறியதாவது: தென்காசி மாவட்டம் அமைத்திட திமுக ஆட்சியின்போது, தென்காசியில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றுக்கு தனி கோட்டம் அமைக்கப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக இக்கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. தனி மாவட்டம் அமைக்க 2 கோட்டம் தேவை என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் உள்ளடங்கிய சங்கரன்கோவிலை தனி கோட்டமாக அறிவித்திட கடந்த 2015இல் மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரைத்தும் கடந்த 4 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. விரைவில் சங்கரன்கோவிலை தனி கோட்டமாகவும், தென்காசியை தனி மாவட்டமாகவும் அறிவிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

எம்எல்ஏ: தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் கூறியதாவது: தென்காசி மாவட்டம் அமைக்க வேண்டும் என நான் பொறுப்பேற்றது முதல் அரசை வலியுறுத்தி வருகிறேன். மாவட்ட தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றால் இரண்டு வருவாய் கோட்டங்கள் வேண்டும். தற்போது சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கான அறிவிப்பு வெளியாகும்போதே தென்காசி மாவட்ட அறிவிப்பும் சேர்ந்து வெளியிடப்படும் என தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார். விரைவில் இரண்டு அறிவிப்புகளும் வெளியாகும் என்றார் அவர்.

"முழுத் தகுதியும் உள்ளது'

இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சரத்குமார் கூறியதாவது: நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் தென்காசி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். 

மக்கள்தொகை, பரப்பளவு, வருவாய் கோட்டங்கள், வருவாய் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தனி மாவட்டமாகப் பிரிப்பதற்கு அரசு நிர்ணயித்த அளவுகோலுடன் முழுத் தகுதியை கொண்ட தென்காசியை தனி மாவட்டமாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com