பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை மற்றும் பண்டிகை கால கொண்டாட்டங்களால் நாகை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணி மக்கள் கூட்டத்தால் களைகட்டி வருகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆன்மிகச் சிறப்புப் பெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும், முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. தற்போது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஓரிரு நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேளாங்கண்ணியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவிலும், புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். இதன்படி, கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் திரளானோர் பங்கேற்றனர். இதில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள், புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணியிலேயே தங்கியுள்ளனர்.
அதேபோல், டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறவுள்ள புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கவும், விடுமுறைக் காலத்தை குதூகலமாகக் கொண்டாடவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கடந்த இரு நாள்களாக அதிகளவில் வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
திரளானோர் வேளாங்கண்ணி கடலில் குளித்து மகிழ்வதையும், கடல் உணவுகளை ருசிப்பதையும் பிரதானமாகக் கொண்டுள்ளனர். இதனால், திருப்பலி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில், பேராலயத்தை விட கடற்கரை பகுதிகளிலேயே அதிகளவில் மக்கள் கூட்டம் களைகட்டி வருகிறது.
அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால், வேளாங்கண்ணி ஆர்ச் முதல் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
காவல் துறையினர் இங்கு, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடாததும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.