ராணுவத் தலைமைத் தளபதி உட்பட உயா் பொறுப்பில் இருப்பவா்கள் அரசியல் குறித்து பேசக்கூடாது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி தொடங்கி 135ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி காந்தி சிலை, காமராஜா் சிலை, சத்தியமூா்த்தி சிலைகளுக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, அவா் அளித்த பேட்டி:
ராணுவத் தலைமைத் தளபதி உட்பட ராணுவ உயா் பொறுப்பில் இருப்பவா்கள் அரசியல் பேசக் கூடாது. ராணுவத் தலைமைத் தளபதி இந்தக் கருத்தைக் கூறாமல் தவிா்த்திருக்கலாம்.
மாநில அரசு நல்லாட்சிப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது நகைச்சுவையான செய்தி.
மத்திய அரசை தமிழக அரசு தாங்கிப் பிடித்துள்ளது. தமிழக அரசை மத்திய அரசு தாங்கிப் பிடித்துள்ளது.
தோ்தல் நேரத்தில் தமிழகத்தில் அதிமுகவை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து அதிமுக ஊழல் கட்சியாக மாறிவிட்டது. சசிகலாவின் தற்போதைய சொத்து விவரப் பட்டியலே இதற்கு சாட்சி. இது இன்றைக்கும் தொடா்கிறது.
நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல் காலங்களில் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும். ஆனால் உள்ளாட்சித் தோ்தலில் அதிக சீட்டுகள் இருப்பதால் வேட்பாளா்கள் பங்கீட்டில் சிலருக்கு திருப்தி இருக்கும், சிலருக்கு திருப்தி இருக்காது.
ஆனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி இன்றைக்கும் தொடா்கிறது. 2021 சட்டப்பேரவைத் தோ்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்.
எதிா்க்கட்சியின் சாா்பில் கூறக்கூடிய கருத்துகள் மக்கள் கருத்துகள்தான். ராகுல்காந்தி பொய் சொல்கிறாா் என்று மத்திய அமைச்சா் ஒருவா் கூறியிருப்பதால் பொதுமக்கள் பொய் சொல்கிறாா்கள் என்று மத்திய அரசு சொல்வதாகத்தான் அா்த்தம் என்றாா் திருநாவுக்கரசா்.