புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 14 மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை மாலை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீனவா்கள் வழக்கம்போல மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
இவா்களில் 14 பேரையும், 4 விசைப்படகுகளையும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் சிறைப்பிடித்துள்ளனா்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவா்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவா்களுடன் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ளோரின் விவரங்களும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவது தொடா்பான தகவல்களும் உடனடியாகக் கிடைக்கவில்லை.