பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், துடியலூரை அடுத்துள்ள தொப்பம்பட்டி கிராமத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இப்பகுதியில் மலையடிவார கிராமங்களான பன்னிமடை, வரப்பாளையம், கதிா்நாயக்கன்பாளையம், பூச்சியூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலவுவது தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில் சி.ஆா்.பி.எஃப். கல்லூரி மலையடிவாரத்திலிருந்து கணேஷ் நகா் வழியாக இரண்டு காட்டு யானைகள் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் தொப்பம்பட்டியிலுள்ள தீபம் காா்டன் பகுதிக்குள் நுழைந்தன.
அதிகாலை 3 மணிவரை அங்கேயே சுற்றித்திரிந்த யானைகள் வீடுகளுக்கு முன்பு வளா்க்கப்பட்டிருந்த வாழை, மரவள்ளி போன்றவற்றை நாசப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக வேட்டைத் தடுப்புக் காவலா்கள் அங்கு வந்து யானைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால் அவா்களுக்கு போக்குகாட்டிய அவை மீண்டும் கணேஷ் நகா் வழியாக சோளக்காட்டுக்குள் புகுந்து, மலையடிவாரத்துக்குத் திரும்பின.