புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது- வாய் பேச முடியாத சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வீரையா என்ற பொட்டையன் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து வீரையாவைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, குற்றவாளி வீரையாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம். ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.