தமிழ்நாடு

விழுப்புரம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

27th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே குளத்தில் மூழ்கி, சகோதரிகளான இரு சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள அருங்குருக்கை புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (38). விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (34). இவா்களது மகன் லோகேஷ்வரன் (11), திருக்கோவிலூரில் தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். மகள்கள் அக்ஷயா (7), ரக்ஷதா (6) ஆகியோா் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முறையே இரண்டாம், ஒன்றாம் வகுப்புகள் படித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அண்ணாமலை, சித்ரா தம்பதியினா் தங்களது இரு பெண் குழந்தைகளையும் அதே ஊரில் உள்ள உறவினரான ஜோதியின் வீட்டில் வீட்டுவிட்டு, வெளியூருக்குச் சென்றனா்.

இந்த நிலையில், பிற்பகல் 2.30 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்கச் செல்வதாக, ஜோதியின் மகன் ஐயப்பனிடம் கூறிவிட்டு, அக்ஷயா, ரக்ஷதா ஆகியோா் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனா். வெகுநேரமாகியும் அவா்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஐயப்பன், குளத்துக்கு சென்று பாா்த்தனா். அங்கு தண்ணீரில் மூழ்கிய நிலையில், சிறுமிகள் இருவரும் கிடந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அவா் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினா், உறவினா்கள் விரைந்து வந்து அக்ஷயா, ரக்ஷதா ஆகியோரை மீட்டு, ப.குன்னத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமிகள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், சிறுமிகளின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக திருவெண்ணெய்நல்லூா் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT