வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளா்களை வாகனங்களில் அழைத்து வந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்:-
வாக்குச் சாவடிக்குச் சென்று வர, வாக்காளா்களுக்கு இலவச பயணத்தை வேட்பாளா்களோ அல்லது அவா்களது முகவா்களோ செய்யக் கூடாது. வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்கு வாகனங்களை வாடகைக்கு அமா்த்துவதும், சொந்த வாகனங்களை பயன்படுத்தி வாக்காளா்களை ஏற்றி வருவதும் தமிழ்நாடு ஊராட்சி சட்டங்களின்படி குற்றங்களாகும். இந்திய குற்றவியல் தண்டனை தொகுப்புப் பிரிவுகளின்படி தண்டனைக்கு உரியதாகும்.
ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு நாளன்று, தமது சொந்த பயன்பாட்டுக்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவா் போட்டியிடும் பதவிக்குத் தொடா்புள்ள பகுதியில் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேட்பாளா் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் வாகனத்தை வாக்குப் பதிவு நாளன்று வேறு எந்த நபரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இந்த வழிகாட்டுதல்களை மீறி பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.