தமிழ்நாடு

நான்கு வாக்குகள்: வாக்குச்சீட்டு முறையில் முதல்முறையாக வாக்களித்தவர்கள் பரவசம்

27th Dec 2019 07:53 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: வாக்குச்சீட்டு முறையில் 4 பேருக்கு வாக்களித்தது வித்தியாசமானதாக இருந்து. இந்த முறையிலான வாக்குப்பதிவு, செலுத்திய வாக்கின் மீது முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தியது என முதல்முறையாக வாக்களித்த கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை நடந்தது. ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் இதற்காக 657 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. 874 பதவிகளுக்கு 2,760 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையாக நின்று வாக்களித்தனர்.  

இதுபோல் முதல்முதலாக வாக்குப்பதிவு செய்யும் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் வரைவு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14,000 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  

ADVERTISEMENT

புதிய வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் குழுக்களாக வந்து தங்களது வாக்கைப் பதிவு செய்தனர்.  ஒரு சில இடங்களில் வாக்கை செலுத்தி விட்டு வெளியே வந்து சுயபடம் எடுத்துக்கொண்டனர்.

லக்காபுரம் வாக்குச்சாவடியில் முதல்வாக்கை பதிவு செய்து விட்டு வெளியே வந்த மாணவி மோனிகேஸ்வரி கூறியதாவது:முதல் முதலில் ஓட்டுப்பதிவு செய்து வந்தது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. 4 வாக்குகள் செலுத்தியதும் புதுமையாக இருந்தது. வாக்குச்சீட்டு முறையில் வாக்கு செலுத்தியதில் மன நிறைவு இருந்தது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, விரும்பிய நபருக்கு வாக்களித்துள்ளேன் என்ற மன திருப்தி இருந்தது என்றார்.  

இதுபோல் 46புதூர் வாக்குச்சாவடியில் தனது முதல் வாக்கை பதிவு செய்துவிட்டு வந்த கல்லூரி மாணவி ஜாய்மெர்லின் கூறியதாவது: ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பிகாம் படித்து வருகிறேன். முதல் முதலாக என தந்தை உடன் வந்து வாக்குப்பதிவு செய்தேன். இது புதுமையான அனுபவமாக இருந்தது. வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தது போட்டது புதுமையாக இருந்தது. நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். முதல் தடவை வாக்குப்பதிவு செய்ய வந்ததால் சிறிது பதற்றமாக இருந்தது. வாக்குப்பதிவு செய்வதில் சில சந்தேகம் இருந்தது வாக்குச்சாவடி பணியில் இருக்கும் அலுவலர்கள் அதனை தீர்த்து வைத்தனர். இனி ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்றுவேன் என்றார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT