திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்குகள் பதிவானதாகக் கூறப்பட்டதால் மற்றொரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்தனர். மேஜை நாற்காலிகளை சூறையாடி வாக்குப் பெட்டியை எரித்தனர். இதனால் 2 மணிநேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது, வாக்காளர்கள் மீண்டும் வாக்குப் பதிவு நடத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். வாக்குச்சாவடி வன்முறை தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 83, 84, 85 ஆகிய எண் கொண்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு காலை முதல் மதியம் 12 மணி வரை அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் பகல் 12 மணியளவில் 84-ஆவது வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு சாதகமாக வாக்குகள் பதிவாகி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வாக்குச்சாவடியில் 6 பெண் அலுவலர்கள் மற்றும் ஒரு அதிகாரி பணியில் இருந்தனர்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் 84-ஆவது வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அவர்கள் சூறையாடினர். வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டியைக் கைப்பற்றி தூக்கி வந்து தீ வைத்து எரித்தனர்.
இதனால் அங்கு வந்த வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தச் சாவடியில் 2 பேர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், வன்முறைக் கும்பலைத் தடுக்க முடியாமல் திணறினர். உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், துணைக்காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்றனர். அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவை நிறுத்தக்கோரி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் கூறியும் வாக்காளர்கள் கலையவில்லை. இதனால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
84-ஆவது வாக்குச் சாவடியில் பகல் 12 மணி வரை 490 வாக்குகள் மட்டும் பதிவாகியிருந்த நிலையில் வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னை மற்றும் சாûலை மறியல் போராட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் 83, 84, 85 ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
அதையடுத்து போலீஸாரின் பாதுகாப்புடன் 85-ஆவது சாவடியில் மட்டும் பகல் 2 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்குச்சாவடி வன்முறை தொடர்பாக 7 பேரை மப்பேடு போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.