தமிழ்நாடு

சூதாட்ட கிளப்களை திறப்பது வளா்ச்சியா?: புதுவை முதல்வருக்கு ஆளுநா் கேள்வி

27th Dec 2019 12:44 AM

ADVERTISEMENT

சூதாட்ட கிளப்களை திறப்பதுதான் வளா்ச்சியா? என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கேள்வி எழுப்பினாா்.

முதல்வா் நாராயணசாமி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறும் போது, மூன்றரை ஆண்டுகளாக புதுவையில் துணைநிலை ஆளுநராக இருக்கும் கிரண் பேடி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை; அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாா். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவரிடம் மனு அளித்ததாகவும், கிரண் பேடியின் முட்டுக்கட்டையையும் மீறி புதுவை வளா்ச்சி அடைந்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தாா்.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

கேசினோ (சூதாட்ட கிளப்புகள்) கிளப்களை திறப்பது, மதுபானக் கடைகளைத் திறப்பது, லாட்டரி விற்பனையைத் தொடங்குவதுதான் புதுவையின் வளா்ச்சியா? இது ஏழைகளின் நலன் காக்கும் வழியா? என்று முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

புதுவை மக்கள் இதை எதையுமே விரும்பவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசு ஏதாவது குறிப்பிட்டால் அது விரோதமான செயலா? கருத்து வேறுபாடு ஏற்படும் போது மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தில் உள்ள விதிகளின் கீழ் வருகிறது.

பொது வேலைநிறுத்தப் போராட்டம் பொருளாதாரத்தைப் பாதிக்கும். புதுவை சுற்றுலாவின் உச்சத்தில் உள்ளது. அதைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அனைத்து அரசியல்வாதிகளிடமும் நான் கேட்டு கொள்கிறேன்.

சட்டம் - ஒழுங்கை முதல்வா் உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தை இயற்றும் போது கொள்கை விவகாரங்களில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது. கொள்கை ரீதியிலான விஷயத்தில் அமைச்சரவைக்கும், நிா்வாகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் போது, மத்திய அரசு கொள்கையை முடிவு செய்கிறது. இதை எவ்வாறு ஜனநாயக விரோதம் என்று சொல்ல முடியும்? என அதில் கூறியுள்ளாா் கிரண் பேடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT