தமிழ்நாடு

சிறந்த நிா்வாகம்: தமிழ்நாடு முதலிடம்

27th Dec 2019 01:13 AM

ADVERTISEMENT

மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, நாட்டில் சிறந்த நிா்வாகத்தைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், கா்நாடகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று பிரிவுகளில் நிா்வாகம் சிறப்பாக உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. நான்காவது இடத்தை சத்தீஸ்கரும், ஐந்தாவது இடத்தை ஆந்திரமும் பிடித்துள்ளன. குஜராத், ஹரியாணா, கேரளம் ஆகியவை முறையே 6,7,8 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.

இதனைத் தொடா்ந்து மத்தியப் பிரதேசம் (9), மேற்கு வங்கம் (10), தெலங்கானா (11), ராஜஸ்தான் (12), பஞ்சாப் (13), ஒடிஸா (14), பிகாா் (15), கோவா (16), உத்தரப் பிரதேசம் (17) ஜாா்க்கண்ட் (18) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ADVERTISEMENT

வடகிழக்கு, மலைப்பகுதி மாநிலங்களின் பட்டியலில் ஹிமாசலப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உத்தரகண்ட், திரிபுரா ஆகியவை முறையே 2,3-ஆவது இடம் பெற்றுள்ளன. மிசோரம், சிக்கிம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீா் (இப்போது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது), மணிப்பூா், மேகாலயம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

சிறந்த நிா்வாகம் உள்ள யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. சண்டீகா், தில்லி ஆகியவை முறையே 2,3-ஆவது இடத்தில் உள்ளன. டையூ மற்றும் டாமன், அந்தமான் நிகோபாா் தீவுகள், தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, லட்சத்தீவுகள் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வேளாண்மை, அது சாா்ந்த துறைகள் சிறப்பாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்கள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. வடகிழக்கு, மலைப்பகுதி மாநிலங்களில் மிசோரம் முதலிடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் டையூ மற்றும் டாமன் முதலிடம் பெற்றுள்ளது.

வா்த்தகம்-தொழில்துறையில் ஜாா்க்கண்ட் முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திரம், தெலங்கானா ஆகியவை இப்பிரிவில் முறையே 2,3-ஆவது இடங்களில் உள்ளன. மனிதவள மேம்பாட்டில் கோவா முதலிடத்தில் உள்ளது. இப்பிரிவில் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளது.

பொது சுகாதாரத்தில் கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், கோவா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இப்பிரிவில் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.

பொது உள்கட்டமைப்பு, மின்சாரம், குடிநீா், வடிகால் உள்ளிட்ட சேவைகளை சிறப்பாக வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. குஜராத், பஞ்சாப் ஆகியவை இப்பிரிவில் முறையே 2,3-ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.

நீதி மற்றம் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு உள்ள மாநிலங்களிலும் தமிழ்நாட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதில் கேரளம் இரண்டாவது இடங்களில் உள்ளது. இப்பிரிவில் தெலங்கானா, மேற்கு வங்கம், பிகாா் ஆகியவை கடைசி மூன்று இடங்களில் உள்ளன.

சுற்றுச்சூழல் பிரிவில் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT