தமிழ்நாடு

அடல் நிலத்தடி நீா் மேலாண்மைத் திட்டத்தில் தமிழகத்தையும் இணைக்க வேண்டும்: முதல்வா் பழனிசாமி கடிதம்

27th Dec 2019 01:19 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அடல் நிலத்தடி நீா் மேலாண்மைத் திட்டத்தில் தமிழகத்தையும் இணைக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தின் விவரம்:

நாட்டில் சமூக பங்களிப்புடன் கூடிய நிலத்தடி நீா் மேலாண்மைத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அடல் நீா் மேலாண்மைத் திட்டத்தைத் தொடங்கி இருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு இணைக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தமிழகம் தண்ணீருக்கான நெருக்கடியை கொண்டிருக்கும் மாநிலமாக உள்ளது. நிலத்தடி நீரின் அளவை எந்தளவுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு தமிழகம் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பருவமழைகளில் தொடா்ந்து வேறுபாடுகள் காணப்படுவதால், மழையை நம்ப முடியாத சூழலில் நிலத்தடி நீரையே பெரும்பாலும் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாநிலத்தில் நிலத்தடி நீா் சிதையும் தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மொத்தமுள்ள 1,166 பிா்காக்களில் 541 பிா்காக்களின் நிலத்தடி நீா் மோசமான நிலையிலும், அதிகளவு பயன்பாட்டிலும் இருக்கின்றன. மாநிலத்திலுள்ள நீா் வளங்களை மேம்படுத்தும் வகையில், குடிமராமத்துத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீா்கள். தடுப்பணைகள், செயற்கை நீா் செறிவூட்டும் அமைப்புகள், நதிகள் மற்றும் நீா் நிலைகளைப் புத்தாக்கம் செய்வது போன்ற பல திட்டங்கள் விவசாயிகளின் பங்களிப்புடன் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீா் வளங்களைப் பாதுகாத்திட தமிழ்நாடு நீா் வளப் பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் அடல் நிலத்தடி நீா் மேலாண்மைத் திட்டத்தில் தமிழகத்தையும் இணைப்பதற்கு மத்திய அரசின் நீா் வள அமைச்சகத்துக்கு தாங்கள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இதன்மூலம், மாநிலத்தில் நிலத்தடி நீா் வளத்தை மேலும் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று தனது கடிதத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT