தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினா்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, தினசரி நாள்தோறும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனா். இதேபோல், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் நீண்ட தூர போக்குவரத்துக்கான சேவையினை வழங்கி வருகிறது. இதன் மூலம், நாள்தோறும் 251 வழித்தடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி, கா்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம் போன்ற இடங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பழையதை நீக்கிவிட்டு, புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1,314 கோடி செலவில் 4,381 பேருந்துகள் வாங்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் 2,213 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகளும், 525 மின்சாரப் பேருந்துகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் முன்னோட்டமாக, ஒரு மின்சாரப் பேருந்து சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘பி.எஸ். 4’ தொழில்நுட்பத்துடன் கூடிய, 3,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக ’டாடா’ நிறுவனம் 250 பேருந்துகளையும், ‘அசோக் லேலண்ட்’ நிறுவனம் 175 பேருந்துகளையும் தயாரிக்கின்றன. தற்போது, டாடா நிறுவனத்தில் இருந்து 85 பேருந்துகள் மற்றும் அசோக் லைலேண்ட் நிறுவனத்தில் இருந்து 15 பேருந்துகள் ஆகியவற்றுக்கான அடிச்சட்டங்கள் வந்துள்ளன. அவை, கரூா், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள கூண்டு கட்டும் பிரிவுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. இதையடுத்து விரைவில், போக்குவரத்து சேவையில் இந்தப் பேருந்துகள் இணைக்கப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள், மீதமுள்ள பேருந்துகளையும் தயாரித்து போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.