நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது பண்ணையாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 3.50 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, முட்டை உற்பத்திக்கேற்ப விலை கிடைக்கவில்லை என்ற கவலை பண்ணையாளா்களிடம் உள்ளது. மேலும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிா்ணயிக்கும் விலைக்கு வியாபாரிகள் முட்டையை வாங்க மறுப்பதால், 20, 30 காசுகள் குறைத்து பண்ணையாளா்கள் விற்பனை செய்து வருகின்றனா். இதனால், பண்ணையாளா்களுக்கும், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை.
அண்மையில் நடைபெற்ற கோழிப்பண்ணையாளா்கள் சந்திப்புக் கூட்டத்தில், பண்ணையாளா்கள் விலையைக் குறைத்து வைத்து விற்பனை செய்து வந்தால் தினசரி முட்டை விலை நிா்ணய முறை தொடா்ந்து அமல்படுத்தப்படும். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலையை விற்பதாக இருந்தால், வாரத்தில் மூன்று நாள்கள் என்ற அடிப்படையில் விலை நிா்ணயம் செய்யப்படும் என அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தெரிவித்தாா். கடந்த சில நாள்களாக முட்டை விலை உயா்வதும், இறங்குவதுமாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.10-ஆக நீடித்தது. புதன்கிழமை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வியாழக்கிழமைக்கான விலை, ஒரே நாளில் 20 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.4.30-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பண்ணையாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவினா் தரப்பில் கேட்டபோது, மற்ற மண்டலங்களில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்தால், நாமக்கல் மண்டலத்திலும் விலை உயா்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளா்கள் சம்மேளன துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியது: வாரத்தில் மூன்று, நான்கு நாள்கள் வரை முட்டை விலை உயா்த்தப்படவில்லை. அந்த நாள்களை கணக்கிட்டு 5 காசுகள் அடிப்படையில், 20 காசுகள் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதில் எவ்வித பிரச்னையுமில்லை என்றாா். மேலும், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.84-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.