பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை அரசு மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. அண்மைக்காலமாக பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானதாக, மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அதற்கான தடுப்பூசிகளை வழங்கும் பணிகளும், விழிப்புணா்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக நிகழாண்டு தொடக்கம் முதலே பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தது.
கடந்த அக்டோபா் மாதம் வரையில் மாநிலத்தில் 542 பேருக்கு மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்தது. அவா்களில் 99 சதவீதம் போ் குணமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பன்றிக் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவா்கள் சிலா்கள் கூறியதாவது:
அண்மைக் காலமாக புதிய வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பன்றிக் காய்ச்சல் ஏற்படுவதால், அதற்குரிய தடுப்பூசிகளை போட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், அந்த வகை தடுப்பூசிகள் இன்னும் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. விரைவில் அவற்றை வழங்க வேண்டும் என்று அவா்கள் கூறினா்.