தமிழ்நாடு

பதவியேற்பு விழா:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஹேமந்த் சோரன் அழைப்பு

26th Dec 2019 01:24 PM

ADVERTISEMENT

ஜார்க்கண்டில் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக தனித்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி வெற்றி பெற்றது. இக்கூட்டணி சார்பில் ஹேமந்த் சோரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், ஆர்ஜேடி 1 இடத்திலும் வென்றன. இதன் மூலம் அந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. பாஜகவுக்கு 25 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜதாந்திரிக்) கட்சியும் ஆதரவு தெரிவித்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் ஜேவிஎம் (பி) தனித்துப் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஜேஎம்எம் கூட்டணியில்தான் ஜேவிஎம் (பி) இடம் பெற்றிருந்தது. எனினும், சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. எனினும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.

ADVERTISEMENT

ஜேஎம்எம் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹேமந்த் சோரன் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். வரும், 29-ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஹேமந்த் சோரன் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். எனினும் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT