நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டை திரும்பப் பெற்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆனந்தகுமாா் தாக்கல் செய்த மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட்
வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.5,500 இழப்பீடாக வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து, காஞ்சிபுரம் சிறப்பு வட்டாட்சியா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.10 ஆயிரத்து 325-ஆக உயா்த்தி வழங்க உத்தரவிட்டது. உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுப்படி இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். அந்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் நிராகரித்து விட்டாா்’ என்று கூறியிருந்தாா். இதனைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட
ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். எனினும், மாவட்ட ஆட்சியா் நேரில் ஆஜராகாததால், ஆட்சியருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.
இதனையடுத்து, நீதிபதி முன் ஆஜரான அரசு வழக்குரைஞா் ஏழுமலை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் நோட்டீஸ் மாவட்ட ஆட்சியரை சென்றடையவில்லை என தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டைத் திரும்பப் பெற்று உத்தரவிட்டாா்.