சூலூர் அருகே முத்துக்கவுண்டன் புதூரில் சாலையோரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் லாரி மோதியதில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(35). இவர் சூலூர் பகுதியில் டிப்பர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை இவர் முதலிபாளையம் பிரிவில் இருந்து சூலூர் நோக்கி லாரியை ஓட்டி வந்தார். அப்பொழுது முத்துக்கவுண்டன் புதூர் அருகே சாலையின் ஓரம் இருந்த மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
இதில் மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் தொடர்ந்து 2 நாட்களாக ஓய்வின்றி லாரியை இயக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட களைப்பு காரணமாகவே லாரி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.