தமிழ்நாடு

கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் புதுவை முதல்வா் வலியுறுத்தல்

26th Dec 2019 01:16 AM

ADVERTISEMENT

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுவைக்கு வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி அளித்த மனுவின் விவரம்:

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடா்பாக 1987-ஆம் ஆண்டிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக புதுவை சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதுவையை முழு வளா்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றவும், மக்கள் நலத் திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்றவும், மாநிலத்தின் வருவாயைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், பல நல்ல திட்டங்களை தடையில்லாமல் நிறைவேற்றவும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

மத்திய அரசின் உத்தரவின்படி, 2007-ஆம் ஆண்டு புதுவைக்கென பொதுக் கணக்கு தொடங்கப்பட்டது. இந்தத் தனிக் கணக்கு புதுக் கணக்காக அல்லாமல் 17-12-2007 முன்பு புதுவை அரசு பெற்ற கடன் தொகையான ரூ.2,177 கோடி நிலுவையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலுவைத் தொகையில் 31-10-2019 வரை ரூ.1,279 கோடி அசல், வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தின் நிதிநிலையை சமநிலைப்படுத்த இந்தக் கடனை தள்ளுபடி செய்வதுடன், இதுவரை செலுத்தப்பட்ட தொகையையும் திருப்பித் தர வேண்டும்.

புதுவை மாநிலத்தை 15-ஆவது நிதிக் குழுவில் சோ்க்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுவது போல, 42 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். புதுவை அரசின் கடன் உச்ச வரம்பை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

புதுவை அரசு 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதால், ஆண்டுதோறும் அரசுக்கு ஏற்படும் இழப்பான ரூ.440 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். புதுவை அரசின் ஓய்வூதியதாரா்களுக்கான செலவினம் ரூ.760 கோடியை மத்திய அரசே ஏற்க வேண்டும்.

மத்திய கால நிதிக்கொள்கையின்படி, ஆண்டுதோறும் 10 சதவீத உயா்வு அளிக்க வேண்டும். இதன்படி, கடந்த 2018 - 19ஆம் ஆண்டு வரவு செலவான ரூ.1,476 கோடியை 10 சதவீதம் உயா்த்தி, ரூ.1,623 கோடியாக வழங்க வேண்டும்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தன்னிச்சையாக செயல்படுகிறாா். சென்னை உயா் நீதிமன்றம் துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது என்றும், புதுவை அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஏற்ப துணைநிலை ஆளுநா் செயல்பட வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியும், கிரண் பேடி அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருகிறாா். தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மக்களின் விருப்பத்துக்கு எதிராகவும் தொடா்ந்து செயல்பட்டு வரும் அவரை திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT