தமிழ்நாடு

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வைகோ நேரில் வாழ்த்து

26th Dec 2019 02:17 PM

ADVERTISEMENT

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 95ஆவது பிறந்தநாள் காணும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்துக் கூறினார். 

வைகோ அவர்களின் வாழ்த்து வருமாறு:-
தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திலேயே கடலோடு சங்கமிக்கின்ற தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுண்டம் திருநகரில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் பிறந்த போற்றுதலுக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய ஆருயிர் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு, போராட்ட உணர்வோடு இந்திய விடுதலையிலும் பங்கேற்றவர்.

பின்னர் கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார். வாலிபப் பருவத்திலேயே சித்ரவதைகளை அனுபவித்து, ஐந்தாண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். காவல்துறையினர் அவரை சித்ரவதை செய்து, தெற்குச் சீமைக்கே உரிய அடையாளமான அவரது மீசையை நெருப்பால் சுட்டுப் பொசுக்கிப் பறித்தார்கள். இத்தனைக்கும் அவர் வன்முறையில் ஈடுபடுகிறவர் அல்ல. வன்முறையைத் தவிர்த்து அறவழியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

நெல்லைச் சீமையிலும், தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியை வளர்த்து, இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டு கட்சிக்காகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்.

ADVERTISEMENT

நேற்று முன்தினம் நான் தொலைக்காட்சியைப் பார்த்தபோது, அண்ணன் நல்லகண்ணு அவர்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார். இப்பொழுதும்கூட ஒரு போராட்டக் களத்தக்குப் புறப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இன்னும் 25 ஆண்டுகள் போராட்டக் களத்தில் நிற்கக்கூடிய அளவுக்கு உடல் வலிமையுள்ள ஒரே தலைவராக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அண்ணன் நல்லகண்ணு அவர்கள்தான் இருக்கின்றார்கள். இதே உடல் வலிமையோடு அவர் இன்னும் 125 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டு நலனுக்காக உழைக்க வேண்டும்.

அவரது உள்ள வலிமையைப் பற்றிச் சொல்லவேண்டியது இல்லை. அது வைரம் பாய்ந்த நெஞ்சம்.

முறையாகப் படித்து, ஆய்வு செய்து உரையாற்றுகிற ஆற்றல் கொணடவர். இலக்கியம், கலை, அரசியல் என்று அனைத்து வகையிலும் சிறப்பாக உரையாற்றக் கூடியவர். தமிழ்நாட்டுக்குக் கருவூலமாகத் திகழக்கூடியவர் அண்ணன் நல்லகண்ணு.

அண்ணன் நல்லகண்ணு அவர்கள் முழு உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ இவ்வாறு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT