மணப்பாறை அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அதிமுக வேட்பாளரின் உறவினர் மீது மிளகாய் பொடி தூவி கொலை முயற்சி நடந்துள்ளது. முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மேற்கு கல்பட்டியில் வசித்து வருபவர் ஸ்ரீரங்கன் கவுண்டர். அந்த பகுதியில் ஊர் முக்கியஸ்தராக இருந்து வரும் ஸ்ரீரங்கன் கவுண்டர், கூட்டுறவு சங்க தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மருமகள் சுந்தரவள்ளி ராமசாமி, வையம்பட்டி ஒன்றியத்தில் 14-வது வார்டுக்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரைகள் முடிந்து ஸ்ரீரங்கன் கவுண்டர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் வீட்டின் அழைப்பு மணியை அடித்துள்ளனர். ஸ்ரீரங்கன் கவுண்டர் வெளியே வந்து பார்த்தபோது அங்கு முகமுடியணிந்து நின்ற நபர்கள், ஸ்ரீரங்கன் கவுண்டர் மீது மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் கயிறு போட்டு அவரை தூக்கி சென்று கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்குள்ள நாய்கள் அதிகமாக குரைக்கவே மர்ம நபர்கள் ஸ்ரீரங்கன் கவுண்டரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்ற நிலையில், காலை பால் கறவைக்காக சென்ற அப்பகுதி மக்கள் ஸ்ரீரங்கன் கவுண்டரை படுகாயத்துடன் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர். புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.