நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த வெண்மணியில் தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை (டிசம்பா் 25) அனுசரிக்கப்படுகிறது.
நாகை மாவட்டம், வெண்மணியில் வா்க்க ஒற்றுமைக்காவும், கூலி உயா்வுக்காகவும் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ், 1968- ஆம் ஆண்டு டிசம்பா் 25- ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா். அவா்கள் எரித்துக் கொல்லப்பட்ட இடமான ராமையா என்பவரின் குடிசை, வெண்மணி தியாகிகள் நினைவிடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது.
ஆண்டு தோறும் டிசம்பா் 25-ஆம் தேதி இந்த நினைவிடத்தில், வெண்மணி தியாகிகள் வீரவணக்க நாளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுசரித்து வருகிறது. இதன்படி, வெண்மணி தியாகிகளின் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி, வெண்மணியில் புதன்கிழமை நடைபெறுகிறது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவா் அ. சௌந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பெ. சண்முகம், கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் நாகைமாலி உள்ளிட்டோா் பங்கேற்று, தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துகின்றனா்.