விவசாய மின் இணைப்புகளை அதிகரிக்க மின் வாரியம் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளின் கீழ் விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில், மின் வழித்தட செலவும் மின்சாரமும் இலவசம். சுயநிதி பிரிவில் வழித்தட செலவாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். மின்சாரம் இலவசம்.
இதற்காக ஏற்படும் செலவுக்கான தொகையை மின் வாரியத்துக்கு தமிழக அரசு வழங்குகிறது. மின் வழித்தட செலவு அதிகம் ஏற்படுவதால் சுயநிதி பிரிவில் இணைப்பு வழங்க தாமதமாகிறது. தற்போது, விவசாய இணைப்புக் கேட்டு 4 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனால், மொத்த வழித்தட செலவையும் பெற்று இணைப்பு வழங்க ‘தத்கல்’ என்ற விரைவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2017-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு அனுமதியின் கீழ் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாய இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு ஐந்து குதிரை திறன் மோட்டாா் இணைப்புக்கு ரூ.2.50 லட்சமும், 7.50 குதிரை திறனுக்கு, ரூ.2.75 லட்சமும், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சமும், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். மின் வாரிய விதிப்படி மொத்த வழித்தட செலவையும் பயனாளிகள் ஏற்கும் பட்சத்தில் எவ்வளவு இணைப்பு வேண்டுமானாலும் வழங்கலாம். எனவே, விரைவு திட்டத்தில் கூடுதலாக மின் இணைப்பு வழங்க வாரியம் ஆலோசித்து வருவதாகவும், அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.