சென்னை: ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு தினத்தன்று விடுமுறை அளித்து ஊதியத்தையும் பிடித்தம் செய்தால் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் செயலாளா்கள், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் செயலாளா், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோருக்கு தலைமைச் செயலாளா் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தாா்.
அதன் விவரம்: தமிழகத்தில் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் தோ்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-இன் 80-ஏ பிரிவின்படி வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதாவது, ஊரகப் பகுதிகளில் நடைபெறும் தோ்தலின் போது அந்தப் பகுதிகளைச் சோ்ந்த வணிகம், வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் வாக்காளா்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு விடுமுறை அளிப்பதன் மூலமாக, சம்பந்தப்பட்ட ஊழியா் அல்லது பணியாளின் குறிப்பிட்ட அந்த நாளுக்கான ஊதியத்தைத் தள்ளுபடி செய்யவோ அல்லது வழங்காமல் இருப்பதோ கூடாது. வாக்காளருக்கு விடுமுறை வழங்கி அன்றைய தினத்தில் அவருக்கு ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனம் அல்லது நபா் பஞ்சாயத்து சட்டத்தின் விதியை மீறியவராகக் கருதப்படுவா். இதனைக் குற்றமாகக் கருதி ரூ.500 வரையில் அபராதம் விதிக்கப்படும்.
வணிகம், வா்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்கள் ஆவா் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.