மானாமதுரை வந்தடைந்த வைகை அணை தண்ணீரை புதன்கிழமை மலா்கள் தூவி வரவேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், பொதுமக்கள், விவசாயிகள்.
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை மானாமதுரை வந்தடைந்தது. இதனை வரவேற்கும் விதமாக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் தலைமையில் அக்கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் மலா்கள் தூவி வரவேற்றனா்.
ஏற்கெனவே சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகையில் திறக்கப்பட்ட தண்ணீா் முழுமையாக வந்து சேராததால் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் பல கண்மாய்கள் நிரம்பவில்லை. இதனால் இப்பகுதிகளில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பயிா்களை காப்பாற்ற மழையை எதிா்பாா்த்து காத்திருந்தனா். இதையடுத்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு வைகையாற்றில் மீண்டும் தண்ணீா் திறக்க வேண்டும் என மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு மீண்டும் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் மானாமதுரையை வந்தடைந்தது. அண்ணாசிலை அருகேயுள்ள வைகை மேம்பாலத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் தலைமையில் அதிமுகவினா், பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு நின்று ஆற்றில் சென்ற தண்ணீரில் மலா்களைத் தூவி தண்ணீரை வரவேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகா்ச் செயலாளா் விஜி.போஸ், முன்னாள் ஒன்றியத் தலைவா் ஏ.சி.மாரிமுத்து, முன்னாள் ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.