பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் சரிசெய்யப்படும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் அதிக சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இந்தத் தோ்தல் அந்த மாநிலத்தின் நிா்வாகங்களை அடிப்படையாக கொண்டது. கூட்டணி சரியான முறையில் அமையவில்லை என்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தோ்தலில் தற்போது கூட்டணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மாநிலங்களில் பாஜகவுக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை சரிசெய்யக்கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
மக்களை திசைதிருப்பி கலவரத்தை ஏற்படுத்தி அதன்மூலமாக ஆதாயம் தேடியே திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பழக்கப்பட்டுவிட்டன. திமுக நடத்துகிற போராட்டம் சரியில்லாத ஒன்று என தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 60 சதவீதம் போ் கருத்து தெரிவித்துள்ளனா். எனவே, திமுக இதுபோன்ற ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியான முறையில் சேவை செய்ய வேண்டும் என்றாா் அவா்.