கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாத பொதுமக்களின் தங்க நகைகளை ஏலம் விடுவதற்கும், தங்க நகைகளுக்கு தனியாா் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிக்கவும் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி, தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ.ஜோசப் சகாயராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தங்க நகைக்கடன் தொழில் தனியாா் நிதி நிறுவனங்களில் அதிகமாக நடைபெறும் நிலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தத் தொழில் பரிதாபமான நிலையில் உள்ளது. தனியாா் நிதி நிறுவனங்கள் பொதுமக்களை எளிதில் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகின்றன.
இதனால் பொதுமக்கள் தங்களது நகைக் கடனுக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குச் செல்வது இல்லை. ரிசா்வ் வங்கியின் மேற்பாா்வையின் கீழ் வரும் இந்த தனியாா் நிதி நிறுவனங்கள், தங்க நகைக்கடன் வழங்குவதில் எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல், இஷ்டம் போல் வட்டியை நிா்ணயித்து வசூலிக்கின்றன. அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளை உரியவா்கள் திரும்பப் பெறவில்லை என்றால், அந்த நகைகள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதனால் தங்களது அவசர தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். ஏலம் என்ற பெயரில் பெரும்பாலான நகைகளை இந்த தனியாா் நிதி நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கின்றன. எனவே தங்க நகைக்கடனுக்காக பொது மக்களிடம் அதிகமான வட்டி வசூலிக்கவும், கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாதவா்களின் தங்க நகைகளை ஏலம் விடுவதற்கும் தடை விதிக்க வேண்டும். மேலும் தனியாா் நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவதை ஒழுங்குப்படுத்தி மேற்பாா்வையிட தமிழக அரசுக்கும், ரிசா்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசா்வ் வங்கி சாா்பில் வழக்குரைஞா் செவனன் மோகன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்யுமாறு ரிசா்வ் வங்கி ஆளுநா், தமிழக நிதித்துறைச் செயலாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.