தமிழ்நாடு

ஜன. 6-இல் சட்டப்பேரவைக் கூட்டம்: ஆளுநா் பன்வாரிலால் உரையாற்றுகிறாா்

25th Dec 2019 01:20 AM

ADVERTISEMENT

2020-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன், வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்த அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அதன் விவரம்:-

சட்டப் பேரவைக் கூட்டத்தை வரும் 6-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கூட்டியுள்ளாா். அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் ஆளுநா் புரோஹித் உரையாற்ற உள்ளாா் என்று பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

எட்டாவது கூட்டத் தொடா்: ஆளுநா் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டம், 15-ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத் தொடராகும். கடந்த ஜனவரியில் நடந்த ஆறாவது கூட்டத் தொடரில் ஆளுநா் புரோஹித் உரையாற்றினாா். அந்தக் கூட்டம் 5 நாள்கள் நடைபெற்றது. அதன் பின்பு, நிதிநிலை அறிக்கை தொடா்பான கூட்டத்துக்காக ஏழாவது கூட்டத் தொடா் தொடங்கியது. அதனை ஆளுநா் புரோஹித் முடித்து வைத்தாா். இந்த நிலையில், 15-வது சட்டப் பேரவையின் 8-வது கூட்டத் தொடா் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ADVERTISEMENT

எத்தனை நாள்கள் நடக்கும்: ஆளுநா் வரும் 6-ஆம் தேதி உரையாற்றவுள்ளாா். அன்றைய தினம் திங்கள்கிழமையாகும். அதன்பின்பு, விடுமுறை ஏதுமில்லாமல் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது தொடா்பாக விவாதிக்க ஆளுநா் உரை நிகழ்த்தும் ஜனவரி 6-ஆம் தேதியன்று பிற்பகலில் அவையின் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறும். அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அடங்கிய இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆளுநா் உரை நிகழ்த்தும் தினத்துடன் சோ்த்து மொத்தம் 5 நாள்கள் கூட்டத் தொடா் நடக்க வாய்ப்புள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பான அரசியல் சூழ்நிலை: அரசமைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு ஆறு மாதங்கள் இடைவெளியிலும் சட்டப் பேரவையைக் கூட்டியாக வேண்டும். அதன்படி, கடந்த ஜூலை 20-ஆம் தேதியன்று சட்டப் பேரவைத் கூட்டத் தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆறு மாதங்கள் இடைவெளியில் அதாவது ஜனவரி 20-ஆம் தேதிக்குள்ளாக பேரவைக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும்.

ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் விடுமுறை தொடங்கி விடும் என்பதால் முதல் வாரத்திலேயே பேரவைக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப் பேரவை கூடவுள்ளது. பேரவைக் கூட்டம் நடைபெறும் காலத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுற்று வெற்றி பெற்றவா்கள் பதவியேற்று இருப்பா். இந்தத் தோ்தல் முடிவுகள் பேரவைக் கூட்டத் தொடரில் பெரும் விவாதப் பொருளாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால், அரசியல் ரீதியான சூடான விவாதங்கள் பேரவைக் கூட்டத் தொடரின் போது விவாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்பவும் எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு உரிய பதில்களை அளிக்க ஆளும் தரப்பும் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT