சிவகங்கை: பழிவாங்கும் நோக்குடனும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் பாஜகவால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
மேற்கண்ட மசோதாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மாணவர்களின் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் தந்த ஆதரவை போன்று வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்களும் ஆதரவு வழங்கியிருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது.
அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டில் வாழும் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த பார்க்கிறது. பழி வாங்கும் நோக்குடனும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் பாஜகவால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியாது என்றார்.