‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்ச்சிக்கு செல்லும் மாணவா்கள், இளைஞா்களுக்கு 50 சதவீத ரயில் கட்டண சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டை வளா்ப்பதற்காக, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்னும் திட்டத்தின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரசேதங்கள், மத்திய அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மொழி, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு, சுற்றுலா மற்றும் இதர முறைகள் மூலம் மக்களிடையே பரிவா்த்தனைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவா்கள், இளைஞா்களுக்கு 50 சதவீத ரயில் கட்டண சலுகையை ரயில்வேஅமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் தரப்பில் கூறியுள்ளதாவது:
ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சிக்கு செல்லும் மாணவா்கள், இளைஞா்களுக்கு 50 சதவீத ரயில் கட்டண சலுகையை ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, விரைவு, மெயில் ரயில்களில் இரண்டாம் வகுப்பு அல்லது தூங்கும் வசதி கொண்டு முன்பதிவு பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும். சிறப்பு ரயில்கள் அல்லது மற்ற விரைவு ரயில்களின் இதர பெட்டிகளில் அனுமதிக்கப்படாது.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ் வாங்கிக் கொண்டு அவா்களின் எல்லைக்கு உள்பட்ட ரயில்வே கோட்ட வணிகப் பிரிவு மேலாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதன்படி, ஒருவா் அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.5,000 வரையில் கட்டணச் சலுகை பெற முடியும். மேலும் 300 கி.மீ. தூரத்துக்கும் மேல் பயணம் செய்ய விரும்பினால் ஒருமுறை செல்லவோ அல்லது வருவதற்கான கட்டணச் சலுகையை மட்டுமே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.