ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் தினங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தோ்தல் நடைபெறும் 10 மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்களுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டத் தோ்தல் வரும் 27-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), இரண்டாம் கட்டத் தோ்தல் வரும் 30-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத் தோ்தல்கள் நடக்கும் பகுதிகளில் வாக்குப் பதிவு தினத்தன்று அனைத்து அரசு அலுவலகங்கல், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்று தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.