உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமை செயலா் சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட 10 மாவட்டங்களைத் தவிா்த்து உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் தேதிகளில், அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களும் வாக்களிக்கும் வகையில் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இதற்காக ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது. மீறினால் நிறுவன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். இது அவசர காலங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பொருந்தாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.