உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராகவும், ஆரம்பப் புள்ளியாகவும் திகழும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளப் பெருமக்கள், தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சிப் பணிகளை எண்ணிப் பார்த்து, தங்களது பொன்னான வாக்குகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ``இரட்டை இலை’’ சின்னத்திலும், கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வழங்கிட வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இதய தெய்வம் அம்மா ஆட்சியின் போது, 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு அமோக ஆதரவு அளித்த வாக்காளப் பெருமக்கள், அம்மாவே இப்பொழுதும் நேரில் வந்து வாக்கு கேட்பதாக எண்ணி, புரட்சித் தலைவியின் நினைவுகளுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், அம்மாவுக்கு அன்புடன் நன்றி கூறும் முகத்தானும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி உங்கள் முன் நிற்கிறோம்.
மக்கள் அனைவரது உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து, மக்களை எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் ஆட்சி நடத்தும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகவும், சட்டம்-ஒழுங்கு சிறப்புடன் அமல்படுத்தப்படும் மாநிலமாகவும் திகழ்வதற்குக் தேதி : 25.12.2019 காரணம், மக்களின் மனம் அறிந்து, தேவை அறிந்து, மக்களுக்கு பணிவுடன் பணியாற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமுறை தான் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
கட்டப் பஞ்சாயத்து, அடியாட்களை வைத்து நடத்தும் அரசியல் அராஜகம், நில அபகரிப்பு, ஏழை, எளிய மக்கள் மீது தாக்குதல், தாய்க்குலத்தை தரக் குறைவாக நடத்துதல் போன்ற அருவருக்கத்தக்க அரசியல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அடியோடு வேரறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அமைதியான சூழல் உள்ளாட்சி நிர்வாகத்திலும் இருந்திட வேண்டும் என்றால், அதற்கு தீய சக்திகளை ஒழித்து, நல்லவர்கள் கையில் உள்ளாட்சிப் பதவிகள் இருப்பது அவசியம் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். எனவே தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உங்களது பொன்னான வாக்குகளை ``இரட்டை இலை’’ சின்னத்தில்
வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறோம்.
2018-ஆம் ஆண்டு பருவமழை பெய்யாததால் மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவமழை பொய்த்ததன் காரணமாக ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன. இருப்பினும் இப்பிரச்னைகளை சமாளிக்க அனைத்து நிதி ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை அம்மாவின் அரசு மேற்கொண்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை பதிவு செய்ய மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறைதீர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன.
கிராம ஊராட்சியின் வருவாயில் தோராயமாக 35 விழுக்காடு மின் உபயோகத்திற்காக செலவிடப்படுகிறது.
மின்திறன் மேம்பாடு, நீடித்த தன்மை, மற்றும் திறம்பட்ட மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்திட அம்மாவின் அரசு, தெரு குழல் விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றம் செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. இந்த எல்.இ.டி. விளக்குகள் 5 ஆண்டு கால உத்திரவாதத்துடன் கூடியதாகும். ஊரக தெரு விளக்குகளின் செயல்பாட்டினை கண்காணித்திட, ஊராட்சியில் உள்ள அனைத்து கம்பங்களுக்கும் எண் இடப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்பட்டுள்ள எல்.இ.டி.விளக்குகளின் பயன்பாட்டு நிலையும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அம்மாவின் அரசு, தமிழ் நாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரித்து, வளமான தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த அணைகள், ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் போன்ற நீர்நிலைகளை, குடிமராமத்து திட்டத்தின் கீழ், விவசாய சங்கங்கள் மூலமாக அவர்களின் பங்கேற்புடன் புனரமைத்துள்ளது. இதனை இயற்கையே அங்கீகரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பருவ மழை பொழிந்து, தூர்வாரப்பட்ட பெரும்பாலான நீர்நிலைகள் நீர் நிறைந்து ததும்பி நிற்கின்றன.
கிராமப்புறங்களில் குடிநீர் வழங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், கழிவுநீர் அகற்றவும், சுகாதாரம் பேணவும், மருத்துவ வசதிகளை வழங்கவும், கான்கிரீட் வீடுகளை கட்டித் தரவும், சாலைகளை அமைக்கவும், சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்யவும், அரசின் நலத் திட்டங்கள் விரைந்தும், முழுமையாகவும் மக்களைச் சென்றடையவும், அம்மா அமைத்துத் தந்திருக்கும் உங்கள் ஆதரவு பெற்ற கழக அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கான நலத் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்படும் வேகத்தையும், ஒழுங்கையும் கண்டு மற்ற மாநிலங்கள் எல்லாம் வியப்படைகின்றன. `ஊரக நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் தமிழ் நாடு தான்’ என்று மத்திய அரசு பாராட்டி பரிசளிக்கிறது. இப்பணிகள் எல்லாம் மேலும் தொடர உங்கள் நல்லாதரவை நாடி நிற்கிறோம்.
மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சி நிர்வாகத்தில் ஈடுபடும்போது, மத்திய, மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பைப் பெறுவதோடு, மத்திய, மாநில அரசுகளோடு தோளோடு தோள் நின்று புதிது புதிதாக திட்டங்களையும், நிதி ஆதாரத்தையும் பெற்று வந்து, உங்கள் பகுதிகளின் வளர்ச்சியில் முழுமையாக அக்கறை காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை வாக்காளப் பெருமக்களுக்கு நாங்கள் அளிக்கிறோம்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வரும் கழகத்தின் வேட்பாளர்கள், அம்மா காட்டிய வழியில் கடமை உணர்வுடனும், கட்டுப்பாடுடனும், தலைமைக்குக் கட்டுப்பட்டும் ஒழுக்கமாகப் பணியாற்றுவார்கள் என்ற உறுதிமொழியையும் உங்களுக்கு அளிக்கிறோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்து மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். அவர்மீது ஊரகப் பகுதி மக்கள் வைத்திருக்கும் அன்பு மிகவும் உணர்வுப்பூர்வமானது; ஆழமானதும் கூட. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் ஊரகப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்கள்.
அந்த வகையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் ஏற்படுத்தித் தந்த கழக அரசு, எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் பாதையில் ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுகிறது. அப்பணிகள் தொடர ``இரட்டை இலை’’ சின்னத்தின் வெற்றி மிகவும் இன்றியமையாதது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதற்கேற்ப சிறப்பான வெற்றியை ``இரட்டை இலை’’ சின்னத்திற்கு அளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு.
தமிழ் நாடு நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் சமச்சீராக வளர்ச்சி பெற்று, முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோட, வருகின்ற 27.12.2019, 30.12.2019 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை’’ சின்னத்திலும், கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும்; மேலும், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களிலும் வாக்களித்து, அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் ! புரட்சித் தலைவர் வழி நடக்கும் புரட்சித் தலைவியின் படை என்றும் வெல்லும் ! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளனர்.